மதுரை சிறையில் பெண் கைதி மீது தாக்குதல்: சிறை ஐஜி பதிலளிக்க ஐகோர்ட் உத்தரவு

மதுரை சிறையில் பெண் கைதி மீது தாக்குதல்: சிறை ஐஜி பதிலளிக்க ஐகோர்ட் உத்தரவு
Updated on
1 min read

மதுரை: மதுரை சிறையில் பெண் கைதி மீது தாக்குதல் நடத்தியதாக காவலர் மற்றும் சக பெண் கைதிகள் மீது நடவடிக்கை எடுக்கக் கோரிய வழக்கில் சிறைத்துறை ஐஜி பதிலளிக்க உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது.

கடலூர் மாவட்டம் செம்மண்டலத்தைச் சேர்ந்த சித்ரா, உயர் நீதிமன்ற மதுரை அமர்வில் தாக்கல் செய்த மனு: அரசு சாரா அறக்கட்டளை மூலம் ஏழைகள் மற்றும் ஆதரவற்றோருக்குச் சேவையாற்றி வந்தேன்.

ஸ்ரீவில்லிபுத்தூர் அனைத்து மகளிர் போலீஸார் ஒரு வழக்கில் என்னைக் கைது செய்தனர். இந்த வழக்கில் மதுரை மத்திய சிறையில் தண்டனை கைதியாக உள்ளேன். சிறையில் என்னை சிறைக் காவலர் மல்லிகா தவறான முறையில் துன்புறுத்தினார்.

இதுகுறித்து ஜெயிலரிடம் புகார் தெரிவித்தேன். இதனால் காவலர் மல்லிகா, கஞ்சா வழக்கில் சிறை தண்டனை அனுபவிக்கும் லதா, தமிழ்செல்வி, சிவன்யா ஆகியோரைத் தூண்டிவிட்டு என்னை கொலை செய்யும் நோக்கத்தில் என் மீது தாக்குதல் நடத்தினர்.

சிறையில் என்னைத் தாக்கியவர்கள் மீது நடவடிக்கை எடுக்கவும், எனக்குப் பாதுகாப்பு வழங்கவும் உத்தரவிட வேண்டும். இவ்வாறு மனுவில் கூறப்பட்டிருந்தது.

இந்த மனு நீதிபதிகள் வேல்முருகன், பூர்ணிமா அமர்வில் விசாரணைக்கு வந்தது. மனு தொடர்பாக சிறைத்துறை துணைத் தலைவர் பதிலளிக்க உத்தரவிட்டு விசாரணையை 2 வாரங்களுக்கு நீதிபதிகள் தள்ளிவைத்தனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in