

சென்னை: சென்னை, முகப்பேரைச் சேர்ந்த 28 வயது பெண் ஒருவருக்கு இன்ஸ்டாகிராம் மூலம் ஐடி ஊழியரான மேற்கு முகப்பேரை சேர்ந்த ஆதித்யன் (31) என்பவருடன் அறிமுகம் ஏற்பட்டது. இதையடுத்து இருவரும் காதலித்து வந்துள்ளனர். ஒன்றரை வருடங்களாகப் பழகிய நிலையில் இருவீட்டாரும் நிச்சயம் செய்து, வரும் டிச.1-ம் தேதி திருமணம் செய்துவைக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.
இந்நிலையில், கடந்த மாதம் ஆதித்யன் மற்றும் அவரது பெற்றோர் திருமணத்துக்கு 50 பவுன் தங்க நகைகளை வரதட்சணையாக கேட்டதாகக் கூறப்படுகிறது. அவ்வளவு நகை போடும் அளவுக்கு வசதி இல்லை எனப் பெண்வீட்டார் தெரிவித்ததையடுத்து மாப்பிள்ளை வீட்டார் திருமணத்தை நிறுத்திவிட்டதாக கூறப்படுகிறது.
இதனால் அதிர்ச்சி அடைந்த பெண்ணின் குடும்பத்தினர் இந்த விவகாரம் தொடர்பாக திருமங்கலம் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் தெரிவித்தனர். அதன்படி, போலீஸார் வழக்குப் பதிந்து விசாரித்தனர். இதில் வரதட்சணை கேட்டு திருமணத்தை நிறுத்தியது தெரியவந்தது. இதையடுத்து ஆதித்யனை போலீஸார் நேற்று முன்தினம் கைது செய்து சிறையில் அடைத்தனர்.