

சென்னை: உடல்வலி நிவாரண மாத்திரைகளை மும்பையிலிருந்து கடத்தி வந்து, சென்னையில் அதை போதைப் பொருளாக விற்பனை செய்த இளைஞர் கைது செய்யப்பட்டார். சென்னையில் போதைப் பொருள் கடத்தல், பதுக்கல் மற்றும் விற்பனையைத் தடுக்க அனைத்து காவல் நிலைய ஆய்வாளர்கள் தலைமையிலும் தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளன. அதன்படி எம்ஜிஆர் நகர் போலீஸார் நேற்று முன்தினம் அதே பகுதியில் உள்ள அண்ணா மெயின் ரோட்டில் உள்ள கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையம் அருகே கண்காணித்தனர்.
அப்போது அங்கு சந்தேகத்துக் கிடமாக நின்று கொண்டிருந்த இளைஞரிடம் விசாரணை செய்யச் சென்றபோது, அந்த நபர் தப்பியோட முயன்றார். இதையடுத்து அவரை போலீஸார் மடக்கிப் பிடித்து விசாரித்தனர். இதில் பிடிபட்டது எம்ஜிஆர் நகர், அண்ணா வீதியைச் சேர்ந்த சஞ்ஜய் (25) என்பது தெரியவந்தது.
அவரிடமிருந்து ஏராளமான உடல் வலி நிவாரண மாத்திரைகள் மற்றும் 5 சிரிஞ்சிகள் பறிமுதல் செய்யப்பட்டன. போதைப் பொருளாக உடல் வலி நிவாண மாத்திரைகளை விற்பனை செய்ய, மும்பையிலிருந்து மொத்தமாக மாத்திரைகளை கடத்தி வந்தது தெரியவந்தது. இதையடுத்து, சஞ்ஜய்யை போலீஸார் கைதுசெய்து சிறையில் அடைத்தனர். இவர் மீது ஏற்கெனவே 7 வழக்குகள் நிலுவையில் உள்ளதாக போலீஸார் தெரிவித்தனர். தொடர்ந்து விசாரணை நடைபெற்று வருகிறது.