

மூணாறில் தடை செய்யப்பட்ட இடத்தில் கட்டப்பட்டு வந்த ரிசார்ட் சரிந்து 2 பேர் மண்ணில் புதைந்து உயிரிழந்தனர். இதனைத் தொடர்ந்து கட்டிட உரிமையாளர்களான எர்ணாகுளத்தைச் சேர்ந்த தம்பதி கைது செய்யப்பட்டனர்.
மூணாறு அருகே பள்ளிவாசல் ஊராட்சிக்கு உட்பட்ட சித்திராபுரத்துக்கு அருகில் உள்ள பகுதி தட்டாத்திமுக்கு. இங்கு தனியார் ரிசார்ட் கட்டுமான பணி பல மாதங்களாக நடந்து வருகிறது. தற்போது இப்பகுதியில் பரவலாக மழை பெய்து வருகிறது. இந்நிலையில் நேற்று மதியம் 3.30 மணிக்கு ரிசார்ட்டின் சுற்றுச்சுவர் திடீரென இடிந்து சரிந்தது. தொடர்ந்து பிடிப்பிழந்த கட்டிடத்தின் ஒருபகுதியும் சரிந்து விழுந்தது. இதில் உள்ளே வேலை பார்த்துக் கொண்டிருந்த 2 தொழிலாளர்கள் மண்ணில் புதைந்தனர்.
தகவலறிந்ததும் அடிமாலி, மூணாறு தீயணைப்புத் துறையினர் மண்ணில் புதைந்தவர்களை மீட்கும் பணியில் ஈடுபட்டனர். ஆனால் இறந்த நிலையிலே அவர்கள் மீட்கப்பட்டனர். இறந்தவர்கள் ஆனச்சால் சங்குபடியைச் சேர்ந்த ராஜீவ் (40), பைசன்வாலியைச் சேர்ந்த பென்னி (49) என்பது தெரியவந்தது. இவர்களது உடல் அடிமாலி தாலுகா அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக கொண்டு செல்லப்பட்டது. மூணாறு சிறப்பு வட்டாட்சியர் காயத்ரி, பள்ளி வாசல் ஊராட்சி தலைவர் பிரதீஷ் குமார் தலைமையிலான குழுவினர் சம்பவ இடத்தை ஆய்வு செய்தனர்.
பின்பு சிறப்பு வட்டாட்சியர் காயத்ரி கூறும்போது, “பாதுகாப்பற்ற இடத்தில் கட்டப்பட்டதால் பணிகளை நிறுத்த ஏற்கெனவே நோட்டீஸ் வழங்கப்பட்டுள்ளது. அதையும் மீறி கட்டியதால் இந்த விபத்து ஏற்பட்டுள்ளது. மூணாறைச் சுற்றிலும் நடைபெறும் மற்ற கட்டுமானப் பணிகளும் அடுத்தடுத்து ஆய்வு செய்யப்படும்” என்றார்.
வெள்ளத்தூவல் போலீஸார் வழக்குப் பதிவு செய்தனர். கட்டிட உரிமையாளர்களான எர்ணாகுளத்தைச் சேர்ந்த தம்பதி ஷெபின், ஷெரின் அனிலா ஆகியோர் கைது செய்யப்பட்டனர். தொடர் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது என்று வருவாய்த் துறையினர் தெரிவித்துள்ளனர்.
மூணாறை சுற்றிலும் அனுமதி பெறாத கட்டுமானங்கள் அதிகளவில் நடைபெற்று வருகின்றன. சுற்றுலாப் பயணிகள் இயற்கை காட்சியை பார்த்து ரசிக்கும் வகையில் தங்குமிடம் இருக்க வேண்டும் என்பதை கருத்தில் கொள்ளும் இவர்கள் அவர்களின் பாதுகாப்பை கண்டுகொள்வதில்லை. இதனால் பள்ளத்தாக்கு, மண்சரிவு அபாயம் உள்ளிட்ட பல பகுதிகளிலும் இதுபோன்ற கட்டிடங்கள் கட்டப்பட்டு வருகின்றன என்பது கவனிக்கத்தக்கது.