கிருஷ்ணகிரியில் ரியல் எஸ்டேட் வியாபாரிகள் 2 பேர் கடத்தல் - கேரளாவில் 5 பேர் கைது

கிருஷ்ணகிரியில் ரியல் எஸ்டேட் வியாபாரிகள் 2 பேர் கடத்தல் - கேரளாவில் 5 பேர் கைது
Updated on
1 min read

கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரி அருகே ரியல் எஸ்டேட் வியாபாரிகள் 2 பேர் கடத்தப்பட்ட வழக்கில் 5 பேரை கேரள போலீஸார் கைது செய்தனர்.

கிருஷ்ணகிரி வஹாப் நகரைச் சேர்ந்தவர் முகமது யூசூப் (57). பழையபேட்டை கணபதி தெருவைச் சேர்ந்தவர் ஜபீர் அகமது (67). இவர்கள் 2 பேரும் ரியல் எஸ்டேட் வியாபாரிகள். இவர்களைக் கடந்த 26-ம் தேதி தொடர்பு கொண்ட சிலர் தங்களுக்கு நிலம் வேண்டும் எனக் கூறியுள்ளனர். மேலும், இது தொடர்பாகப் பேசுவதற்காகக் குருபரப்பள்ளி அருகே வருமாறு கூறியுள்ளனர். இதை நம்பி அங்குச் சென்ற முகமது யூசூப், ஜபீர் அகமது ஆகியோரை, அக்கும்பல் காரில் கடத்திச் சென்றனர். மேலும், அவர்களை விடுவிக்க அவர்களது உறவினர்களைச் செல்போனில் தொடர்பு கொண்டு ரூ.50 லட்சம் கேட்டு மிரட்டினர்.

இது தொடர்பாகக் கடத்தப்பட்ட இருவரின் உறவினர்கள் கிருஷ்ணகிரி தாலுகா காவல் நிலையத்தில் நேற்று புகார் அளித்தனர். இதையடுத்து, மாவட்ட காவல் கண்காணிப்பாளர் தங்கதுரை உத்தரவின் பேரில், காவல் ஆய்வாளர் மணிமாறன் தலைமையில் தனிப்படை அமைத்து விசாரித்து வந்தனர். விசாரணையில், கேரள மாநிலத்தைச் சேர்ந்தவர்கள் இக்கடத்தலில் ஈடுபட்டது தெரியவந்தது. மேலும், இது தொடர்பாகக் கேரளா போலீஸாருக்கு தகவல் அளித்தனர்.

இதனிடையே, கேரள மாநிலம் கோச்சோட்டுகோணம் அருகே செங்கல் என்ற பகுதியில் நேற்று இரவு நின்ற ஒருவரிடம் அம்மாநில போலீஸார் விசாரித்தனர். இந்த விசாரணையில், கிருஷ்ணகிரி வியாபாரிகளைக் கடத்திய வழக்கில் தொடர்புடையவர் என்பது தெரிந்தது. தொடர்ந்து, அவர் அளித்த தகவல் அடிப்படையில் ரியல் எஸ்டேட் வியாபாரிகள் 2 பேரையும் மீட்டனர்.

இந்தக் கடத்தலில் ஈடுபட்ட பரஸ்சலாவைச் சேர்ந்த சாமுவேல் தோமஸ் (23), நெய்யாற்றின்கரை பினோய் ஆகஸ்டின் (28), அபிராம் (30), திருவனந்தபுரம் விஷ்ணு (29), சேலம் சுரேஷ்குமார் (42) ஆகிய 5 பேரை கைது செய்தனர். மேலும், வியாபாரிகளை அடைத்து வைத்திருந்த வீட்டின் உரிமையாளர் சந்தோஷ், சாம் உள்ளிட்ட 3 பேரை தேடி வருகின்றனர். இத்தகவல் அறிந்த கிருஷ்ணகிரி தனிப்படை போலீஸார் இவ்வழக்கில் அடுத்தக் கட்ட நடவடிக்கைக்காகக் கேரளா சென்றுள்ளனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in