மதுரையில் 7 மாதங்களில் 90+ போக்சோ வழக்குகள் பதிவு!

மதுரையில் 7 மாதங்களில் 90+ போக்சோ வழக்குகள் பதிவு!
Updated on
1 min read

மதுரை: மதுரையில் சிறாருக்கு எதிரான பாலியல் குற்றச் செயல்கள் தொடர்பாக 7 மாதங்களில் 90-க்கும் மேற்பட்ட ‘போக்சோ’ வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன.

பெண்கள் மற்றும் சிறுவர், சிறுமிகளுக்கு எதிரான குற்றச்செயல்களை தடுக்க, மதுரை மாநகர காவல் துறையினர் தீவிர நடவடிக்கை எடுக்கின்றனர். இதற்கென மகளிர் காவலர்கள் அடங்கிய தனிக் குழுவும் செயல்கிறது. இக்குழு மூலமும், மகளிர் காவல் நிலையங்கள் வழியாகவும் பள்ளி, கல்லூரி மற்றும் பெண்கள் அதிகமாக பணிபுரியும் இடங்களில் ‘போக்சோ ’ சட்ட விழிப்புணர்வு ஏற்படுத்துகின்றனர். இருப்பினும், சிறுமிகள், பெண் குழந்தைகளுக்கு எதிரான பாலியல் குற்றச் சம்பவங்களும் அதிகரிப்பதாக தெரிகிறது.

இதன்படி, மதுரை திருப்பரங்குன்றம் மகளிர் காவல் நிலையம் மூலம் 10 போக்சோ வழக்குகளும், மதுரை மாநகர் மகளிர் காவல் நிலையத்தில் 24, தெற்கு மகளிர் காவல் நிலையத்தில் 14 வழக்குகளும், தல்லாகுளத்தில் 15, அண்ணாநகரில் 15 வழக்குகளும் என கடந்த 7 மாதங்களில் மட்டும் 94 வழக்குகள் பதிவாகி இருப்பது தெரிகிறது. இது போன்ற குற்றச் செயல்களை தடுக்க, மாநகர காவல் ஆணையர் லோகநாதன் ஆலோசனையின் பேரில் மகளிர் போலீஸார் தொடர்ந்து விழிப்புணர்வு, தடுப்பு நடவடிக்கைகளில் ஈடுபடுகின்றனர்.

இது குறித்து போலீஸார் கூறுகையில், ”பெண் குழந்தைகளுக்கு எதிரான பாலியல் குற்றச்செயல்கள் பெரும்பாலும் உறவினர்கள், நட்பு வட்டாரத்திற்குள் நடப்பது தெரிகிறது. 18 வயது பூர்த்தியாகும் முன்பே சொத்துக்கு ஆசைப்பட்டு உறவினர்களுக்கு கட்டாயத் திருமணம் செய்து வைப்பது போன்ற செயலாலும் போக்சோ வழக்கில் சிலர் சிக்குகின்றனர்.

குறிப்பாக, பெண் குழந்தைகளை பெற்ற பெற்றோருக்கு இது பற்றிய விழிப்புணர்வு அவசியம் தேவை. இதற்காக குடியிருப்புப் பகுதிகள், பெண்கள் அதிகமாக பணிபுரியும் இடங்களுக்கு சென்றும் போக்சோ சட்டம், தகவல் தெரிவிக்கும் காவலன் செயலிகள் குறித்தும் விழிப்புணர்வு ஏற்படுத்துகிறோம். இதன் மூலம் போக்சோ வழக்குகளை குறைக்க நடவடிக்கை எடுக்கப்படும்” என்று போலீஸார் தெரிவித்தனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in