

திருப்பூர்: திருப்பூர் - தாராபுரம் சாலை பிரண்ட்ஸ் கார்டனை சேர்ந்தவர் குப்புசாமி. சில ஆண்டுகளுக்கு முன்பு இறந்தார். இவரது மனைவி சுகந்தி. இவர்களது மகள் பிரீத்தி (26). ஐடி ஊழியரான இவருக்கும், ஈரோடு மாவட்டம் வீரப்பன்சத்திரத்தை சேர்ந்த சதீஷ்வர் (29) என்பவருக்கும் கடந்த ஆண்டு செப்டம்பர் 15-ம் தேதி திருமணம் நடந்தது. வரதட்சணையாக 80 பவுன் நகை, ரூ.20 லட்சம், கார் ஆகியவற்றை சுகந்தி கொடுத்ததாக கூறப்படுகிறது.
கடந்த ஒரு மாத காலமாக திருப்பூரில் உள்ள தாய் வீட்டில் பிரீத்தி தங்கியிருந்தார். நேற்று சுகந்தி வீட்டில் இல்லாதபோது, வீட்டில் தூக்கிட்டு பிரீத்தி தற்கொலை செய்து கொண்டார். புகாரின்பேரில், நல்லூர் போலீஸார் விரைந்து வந்து, சடலத்தை மீட்டு பிரேத பரிசோதனைக்காக திருப்பூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
இதுதொடர்பாக பிரீத்தியின் குடும்பத்தினர் கூறும்போது, “பிரீத்தியின் பூர்விக சொத்து வகையில் ரூ.50 லட்சம் வருவதை அறிந்து சதீஷ்வர் கேட்டதாக கூறப்படுகிறது. மன உளைச்சல் அடைந்த பிரீத்தி, திருப்பூரில் உள்ள தாய் வீட்டுக்கு வந்து தற்கொலை செய்துகொண்டார். பிரீத்தி இறந்த தகவல் தெரிந்தும், சதீஷ்வரின் குடும்பத்தினர் யாரும் வரவில்லை” என்றனர்.
இந்நிலையில், உடுமலையில் கொலையான சிறப்பு காவல் உதவி ஆய்வாளரின் சடலத்தை காண திருப்பூர் அரசு மருத்துவமனைக்கு வந்த மாநகர காவல் ஆணையர் ராஜேந்திரனை, பிரீத்தியின் உறவினர்கள் முற்றுகையிட்டனர். சதீஷ்வர் மற்றும் அவரது குடும்பத்தினர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டுமென வலியுறுத்தினர்.
மாநகர காவல் ஆணையர் ராஜேந்திரன் கூறும்போது, “பிரீத்திக்கு தற்கொலை வழக்கில், கோட்டாட்சியர் விசாரணை நடந்து வருகிறது. அவரது விசாரணை முடிவின்படி, அடுத்தக்கட்ட நடவடிக்கை எடுக்கப்படும்” என்றார்.