

ராஜபாளையம்: ராஜபாளையத்தை சேர்ந்த கல்லூரி மாணவியிடம் சமூக வலைதளம் மூலம் பழகி 26 பவுன் தங்க நகையை பெற்று மோசடி செய்த கர்நாடக மாநிலத்தை சேர்ந்த லிவின் என்ற இளைஞரை போலீஸார் கைது செய்தனர்.
ராஜபாளையம் ஆவாரம்பட்டி தெருவை சேர்ந்த கூலி தொழிலாளியின் 19 வயது மகள் சிவகாசி தனியார் கல்லூரியில் இளங்கலை இரண்டாம் ஆண்டு படித்து வருகிறார். இவருக்கு சமூக வலைதளம் மூலம் கர்நாடக மாநிலம் குடகு மாவட்டத்தைச் சேர்ந்த லிவின் (25) என்பவருடன் அறிமுகம் ஏற்பட்டு இருவரும் பழகி வந்துள்ளனர். பின்னர், மாணவியை காதலிப்பதாகவும், திருமணம் செய்து கொள்வதாகவும் லிவின் கூறியுள்ளார்.
மேலும், இருவரும் மதுரையில் நேரில் சந்தித்துள்ளனர். அப்போது அவசர தேவை எனக் கூறி மாணவியிடம் இருந்து 26 பவுன் தங்க நகை மற்றும் ரூ.50 ஆயிரம் பணத்தை லிவின் பெற்று சென்றுள்ளார். பின்னர் வீட்டில் இருந்த நகை, பணம் மாயமானது தொடர்பாக பெற்றோர் விசாரணை நடத்தியதில் மாணவி லிவினுடனான பழகியது மற்றும் அவருக்கு நகை, பணம் கொடுத்து உதவி செய்ததை கூறியுள்ளார்.
உடனடியாக, இது குறித்து ராஜபாளையம் வடக்கு காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது. கடந்த வாரம் மாணவியை பார்ப்பதற்காக ராஜபாளையம் வந்த லிவின், போலீஸாரை கண்டதும் தப்பி ஓடியுள்ளார். இதையடுத்து, வழக்கு பதிவு செய்த ராஜபாளையம் போலீஸார் கர்நாடக மாநிலத்திற்கு சென்ற லிவினை கைது செய்தனர். மேலும், அவரிடம் இருந்த 21 பவுன் தங்க நகையை பறிமுதல் செய்தனர். பின்னர் ராஜபாளையம் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி 15 நாட்கள் காவலில் சிறையில் அடைத்தனர்.