

கள்ளக்குறிச்சி: கல்வராயன் மலைப் பகுதியில் பள்ளி மாணவிகளுக்கு பாலியல் தொந்தரவு கொடுத்ததாக 2 ஆசிரியர்கள் கைது செய்யப்பட்டனர்.
கள்ளக்குறிச்சி மாவட்டம் கல்வராயன் மலைப் பகுதியில் உள்ள மணியார்பாளையம் கிராமத்தில் அரசு பழங்குடியினர் உண்டு, உறைவிட மேல்நிலைப் பள்ளி செயல்பட்டு வருகிறது. இங்கு500-க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் பயின்று வருகின்றனர்.
இந்நிலையில், பள்ளி தலைமை ஆசிரியர் தனபால் மாணவிகளுக்கு பாலியல் தொந்தரவு கொடுத்ததாக புகார் எழுந்தது. இது தொடர்பாக மாவட்ட குழந்தைகள் நல பாதுகாப்பு அலுவலர் இளையராஜா நடத்திய விசாரணையில், தலைமை ஆசிரியர் தனபால், இயற்பியல் ஆசிரியர் ராஜவேல், பகுதிநேர ஆசிரியர் தேவேந்திரன் ஆகியோர் மாணவிகளுக்கு பாலியல் தொந்தரவு அளித்தது உறுதி செய்யப்பட்டது.
இதையடுத்து தலைமை ஆசிரியர், இயற்பியல் ஆசிரியரைபணியிடை நீக்கம் செய்த மாவட்டபழங்குடியினர் நலத் துறை அலுவலர் அண்ணாதுரை, பகுதி நேரஆசிரியரை பணிநீக்கம் செய்தார். இச்சம்பவம் தொடர்பாக காவல்துறையில் புகார் அளித்த நிலையில், கள்ளக்குறிச்சி அனைத்து மகளிர் காவல் நிலைய போலீஸார் விசாரணை நடத்தி, தனபால், தேவேந்திரன், ராஜவேல் ஆகிய 3 பேர் மீது போக்சோ பிரிவின் கீழ் வழக்கு பதிவு செய்தனர். தொடர்ந்து தேவேந்திரன், ராஜவேல் ஆகியோர் கைது செய்யப்பட்டனர். மேலும், தலைமறைவாக உள்ள தலைமை ஆசிரியர் தனபாலை போலீஸார் தேடி வருகின்றனர்.