சிறுமிகளுக்கு பாலியல் தொல்லை: செங்குன்றம் அருகே மதபோதகர் கைது

கைதான மதபோதகர்
கைதான மதபோதகர்
Updated on
1 min read

திருவள்ளூர்: செங்குன்றம் அருகே சிறுமிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக மதபோதகரை போலீஸார் கைது செய்துள்ளனர்.

திருவள்ளூர் மாவட்டம், சோழவரம் அருகே உள்ள பம்மதுகுளம் பகுதியை சேர்ந்தவர் விக்டர் என்கிற காமராஜ் (54). சென்னை, ஐசிஎப் ஊழியர் மற்றும் மதபோதகரான இவர் தன் வீட்டின் ஒரு பகுதியில் கிறிஸ்தவ சபை நடத்தி வருகிறார். பம்மதுகுளம் பகுதியில் உள்ள அங்கன்வாடி மையத்தில் பணிபுரிந்து வரும் விக்டரின் மனைவி வீட்டில் பள்ளி மாணவ - மாணவிகளுக்கு டியூஷன் நடத்தி வந்துள்ளார்.

இந்த டியூஷனில், 5-ம் வகுப்பு முதல் 8-ம் வகுப்பு மாணவ - மாணவிகள் 10-க்கும் மேற்பட்டோர் படித்து வருகின்றனர். இந்நிலையில், தன் மனைவி இல்லாதபோது, மாணவ- மாணவிகளுக்கு டியூஷன் நடத்தி வந்த விக்டர், டியூசன் படிக்க வந்த சிறுமிகள் 9 பேருக்கு பாலியல் தொல்லை கொடுத்து வந்ததாக கூறப்படுகிறது. இதுகுறித்து, பாதிக்கப்பட்ட சிறுமிகள் தங்கள் பெற்றோரிடம் கூறி அழுதுள்ளனர்.

இதையடுத்து, பாதிக்கப்பட்ட சிறுமிகளில், இரு சிறுமிகளின் பெற்றோர் அளித்த புகாரின் பேரில் செங்குன்றம் அனைத்து மகளிர் காவல் நிலைய போலீஸார் விசாரணை நடத்தினர். அதன் அடிப்படையில், நேற்று இரவு போக்சோ சட்டத்தின் கீழ் போலீஸார் வழக்குப் பதிவு செய்து, விக்டரை கைது செய்தனர். பிறகு, அவரை பொன்னேரி நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி புழல் சிறையில் அடைத்தனர்.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in