

நட்பு வைத்து ஏமாற்றியதாடு, கொலை மிரட்டல் விடுப்பதாக புதுச்சேரியில் இன்ஸ்பெக்டர் மீது பெண் ஒருவர் டிஜிபி அலுவலகத்தில் புகார் அளித்துள்ளார்.
புதுச்சேரி வில்லியனூர் பகுதியைச் சேர்ந்தவர் 39 வயது பெண். இவர் தன்னை புதுச்சேரி காவல்துறையில் பணிபுரியும் இன்ஸ்பெக்டர் ஒருவர் என்னுடன் நட்பு வைத்து ஏமாற்றியதாடு கொலை மிரட்டல் விடுத்து வருவதாகவும், அவர் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என டிஜிபி அலுவலகத்தில் நேற்று புகார் ஒன்றை அளித்தார்.
முன்னதாக அந்தப் பெண் செய்தியாளர்களிடம் கூறியதாவது: புதுச்சேரி காவல் துறையில் சிறப்பு பிரிவு இன்ஸ்பெக்டராக சிவா ஜான்சன் கென்னடி பணிபுரிந்து வருகிறார். இவர் கடந்த 2010-ல் போக்குவரத்து காவல் நிலையத்தில் சப்-இன்ஸ்பெக்டராக பணிபுரிந்தார். அப்போது எனது சகோதரர் விபத்தில் மரணம் அடைந்தது தொடர்பாக சாட்சி கையெழுத்து போடுவதற்காக போக்குவரத்து காவல் நிலையத்துக்கு சென்றிருந்தேன். அவர் எனது செல்போன் எண்ணை வாங்கிக்கொண்டு தொடர்ந்து பாலியல் ரீதியாக தொல்லை கொடுத்து வந்தார். பின்னர் எங்களுக்குள் நட்பு ஏற்பட்டது. இதுகுறித்து தெரிந்த எனது கணவர் என்னிடமிருந்து பிரிந்து சென்றார்.
இதனிடையே பிளஸ் 2 படித்து வந்த எனது மூத்த மகளுக்கு தொல்லை கொடுத்த நிலையில், எனது மகள் கடந்த 2017-ம் ஆண்டு விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார். காவல்துறை அதிகாரியாக இருந்ததால் அவரது அதிகாரத்தை பயன்படுத்தி எனது மகளின் பிரேதபரிசோதனை அறிக்கையையும் மாற்றி வாங்கியதோடு, என்னையும் மாற்றி பேச வைத்தார்.
இதன் பிறகு எனது இளைய மகளும், மகனும் அவரது தந்தையுடன் சென்றுவிட்டனர். சிறிது நாட்கள் கழித்து எனது இளைய மகளும் மன வேதனையில் இறந்து விட்டார். இன்ஸ்பெக்டர் சிவா ஜான்சன் கென்னடி என்னிடமிருந்த நகைகள், சொத்து, பணம் ஆகியவற்றை பத்திரமாக பார்த்துக் கொள்வதாக கூறி வாங்கிக் கொண்டார்.
கடந்த மாதம் எனக்கு உடல்நிலை சரியில்லாததால் அவருக்கு போன் செய்தேன். அப்போது அவர் போனை எடுக்காததால் உடனடியாக ரெட்டியார் பாளையத்தில் உள்ள அவரது வீட்டுக்கு சென்றேன். அங்கு சிவா ஜான்சன் கென்னடி, பெண் ஒருவருடன் இருந்தார். அதுபற்றி நான் கேட்டபோது என்னை தாக்கி வீட்டைவிட்டு வெளியே துரத்திவிட்டார். காயம் அடைந்த நான் ரெட்டியார்பாளையம் காவல் நிலையத்தில் புகார் கொடுக்க சென்றேன்.
அப்போது தொலைபேசி மூலம் இன்ஸ்பெக்டர் சிவா ஜான்சன் கென்னடி தொடர்பு கொண்டு, புகார் அளித்தால் எனது மகனை கொலை செய்து விடுவதாக மிரட்டியதால் புகார் அளிக்காமல் திரும்பி வந்துவிட்டேன். அவர் மீது புகார் அளித்தால் என்னையும், எனது கணவரையும், மகனையும் கொலை செய்துவிடுவதாக தொடர்ந்து மிரட்டி வருகிறார். இது தொடர்பாக இன்ஸ்பெக்டர் சிவா ஜான்சன் கென்னடி மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தெரிவித்தார்.