கைதியுடன் இன்ஸ்டாவில் பேசி பெங்களூருவில் இருந்து மதுரைக்கு போதைப் பொருள் கடத்தல்: 4 பேர் கைது

கைதியுடன் இன்ஸ்டாவில் பேசி பெங்களூருவில் இருந்து மதுரைக்கு போதைப் பொருள் கடத்தல்: 4 பேர் கைது
Updated on
1 min read

மதுரை: சிறை கைதியிடம் இஸ்ட்ராகிராம் மூலம் பேசி பெங்களூருவில் இருந்து மதுரைக்கு பேருந்தில் கஞ்சா, மெத்தப்பெட்டமைன் கடத்திய 4 பேரை மதுவிலக்கு போலீஸார் கைது செய்தனர்.

சிவகங்கை மாவட்டம், காரைக்குடியை சேர்ந்தவர் அண்ணாமலை. மதுரை மேல அண்ணாதோப்பு பகுதியைச் சேர்ந்தவர்கள் லெட்சுமணன், ராமர் , ஆனையூர் சூர்யபிரகாஷ் ஆகிய 4 பேரும் இன்ஸ்டாகிராம் மற்றும் செல்போன் மூலம் நண்பர்களாகினர். சில மாதத்திற்கு முன் இவர்கள் வழக்கில் சிக்கி கோவை சிறையில் இருந்தனர். அப்போது, அங்கிருந்த மதுரை நவீன் நாகராஜ் என்பவருடன் பழக்கம் ஏற்பட்டது. இப்பழக்கத்தால் பெங்களூரிலுள்ள தினேஷ், மதுரை மேலவாசல் ஹரி, கரிமேடு காக்காமுட்டை கார்த்திக் ஆகியோருடனும் 4 பேருக்கும் அறிமுகம் கிடைத்துள்ளது.

நவீன் நாகராஜ் தற்போது, பெங்களூர் சிறையில் இருக்கிறார். அவருடன் இன்ஸ்டாகிராம் மூலம் அண்ணாமலை உட்பட 4 பேர் தொடர்பு கொண்டுள்ளனர். அவரது ஆலோசனையின்படி பெங்களூர் தினேஷ் மூலமாக கஞ்சா, மெத்தபெட்டமைன் வாங்கி வந்து மதுரையில் சில நண்பர்களுடன் சேர்ந்து சில்லரையாக விற்றுள்ளனர்.

இந்நிலையில் கடந்த ஒரு வாரத்திற்கு முன்பு சிறையிலுள்ள நவீன் நாகராஜ், அண்ணாமலை உள்ளிட்ட 4 பேரிடம் இன்ஸ்டாகிராமில் தகவல் பகிர்ந்துள்ளார். பெங்களூரில் தினேஷிடம் கஞ்சா, மெத்தப்பெட்டமைன் உள்ளது, தேவையெனில் வாங்கி கொள்ளலாம் என கூறியுள்ளார். இதையடுத்து பெங்களூரு சென்ற 4 பேரும் கஞ்சா, மெத்தப்பெட்டமைனை வாங்கியுள்ளனர்.

கோவையில் இருந்து மதுரைக்கு பேருந்தில் அவர்கள் கடத்தி வருவது பற்றிய தகவல் நேற்று முன்தினம் மதுரை மாநகர மதுவிலக்கு பிரிவுக்கு கிடைத்தது. காவல் ஆய்வாளர் சேதுமணி மாதவன் தலைமையில் அப்பிரிவு போலீஸார் மதுரை பாத்திமா கல்லூரி அருகே சம்பந்தப்பட்ட பேருந்தை நிறுத்தினர்.

அப்பேருந்தில் பயணித்த அண்ணாமலை(25), லெட்சுமணன் (21), ராமர் (21) சூர்யபிரகாஷ்(24) ஆகிய 4 பேரையும் பிடித்ததனர். அவர்களின் உடைமைகளை ஆய்வு செய்தபோது, 25 கிலோ கஞ்சா, 10 கிராம் மெத்தபெட்டமைன் இருப்பது தெரிந்து போலீஸார் அதிர்ச்சி அடைந்தனர். அவர்களை கைது செய்து அவர்களிடம் இருந்து கஞ்சா, மெத்தபெட்டமைனை போலீஸார் பறிமுதல் செய்தனர். மேலும், நவீன் நாகராஜன், ஹரி, கார்த்திக் ஆகியோரை போலீசார் தேடி வருகின்றனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in