

சிவகங்கை: மடப்புரம் கோயில் காவலாளி அஜித்குமார் கொலை வழக்கில், அவரது சகோதரர் உட்பட 5 பேருக்கு சிபிஐ சம்மன் அளித்துள்ளது. சிவகங்கை மாவட்டம், திருப்பு வனம் அருகே மடப்புரத்தைச் சேர்ந்த கோயில் காவலாளி அஜித்குமார் (29) போலீஸ் விசாரணையில் உயிரிழந்தார். இந்த சம்பவத்தை கொலை வழக்காகப் பதிவு செய்து, சிபிஐ சிறப்பு குற்றப்பிரிவு டிஎஸ்பி மோஹித்குமார் தலைமையிலான அதிகாரிகள் விசாரித்து வருகின்றனர்.
ஜூலை 14-ம் தேதி மடப் புரத்தில் அஜித்குமாரை போலீஸார் தாக்கிய இடங்களை ஆய்வு செய்தனர். நேற்று மடப்புரத்தில் ஆட்டோ ஓட்டுநர் அருண்குமார், கோயில் காவலாளிகள் பிரவீன் குமார், வினோத்குமார், கோயில் உதவி ஆணையரின் ஓட்டுநர் கார்த்திக்வேல், அஜித்குமார் சகோதரர் நவீன்குமார் ஆகியோருக்கு சம்மன் அளித்தனர். அதில், மதுரையில் உள்ள சிபிஐ அலுவலகத்தில் இன்று (ஜூலை 18) காலை 10.30 மணிக்கு ஆஜராகுமாறு தெரிவிக்கப்பட்டிருந்தது.
காவல் நிலையத்தில் ஒரு மணி நேரத்துக்கும் மேலாக சிசிடிவி காட்சிகளை சிபிஐ அதிகாரிகள் ஆய்வு செய்தனர். அப்போது, காவல் நிலைய ஆய்வாளர் ரமேஷ்குமார் மட்டும் இருந்தார். மற்ற போலீஸார் வெளியேற்றப்பட்டனர். தொடர்ந்து, அங்கு பல மணி நேரம் விசாரணை நடத்தினர். பின்னர் மழவராயனேந் தலில், இவ்வழக்கில் கைதாகியுள்ள தனிப்படை காவலர் ராஜாவின் வீட்டுக்குச் சென்று விசாரணை நடத்தினர்.