பரமத்தி வேலூர் இளைஞர் தற்கொலை வழக்கு: திருமணம் செய்து ஏமாற்றிய பெண் உட்பட 6 பேர் கைது

பரமத்தி வேலூர் இளைஞர் தற்கொலை வழக்கு: திருமணம் செய்து ஏமாற்றிய பெண் உட்பட 6 பேர் கைது
Updated on
1 min read

பரமத்தி வேலூர் அருகே திருமண மோசடியில் ஈடுபட்ட மதுரையைச் சேர்ந்த மணப்பெண் உள்ளிட்ட 6 பேரை போலீஸார் கைது செய்தனர்.

நாமக்கல் மாவட்டம் பரமத்தி வேலூர் அருகே வடகரையாத்தூரைச் சேர்ந்தவர் சிவ சண்முகம் (35). இவர் தனது முதல் மனைவியை விவாகரத்து செய்துள்ளார். தொடர்ந்து 2-ம் திருமணம் செய்ய முடிவு செய்து பரமத்தி வேலூர் அருகே திடுமல் கவுண்டம்பாளையத்தைச் சேர்ந்த திருமண இடைத்தரகர் தமிழ்ச்செல்வி (45) என்பவரைத் தொடர்பு கொண்டுள்ளார். அவர் பெண் பார்த்துத் தருவதாகக் கூறி, சிலரை அறிமுகம் செய்து வைத்துள்ளார்.

இதில்,கடந்த 7-ம் தேதி மதுரை சிந்தாமணி வாழைத்தோப்பு பகுதியைச் சேர்ந்த ஜோதி (எ) ஜோதி லட்சுமி (23) என்பரை சிவ சண்முகம் திருமணம் செய்து கொண்டார். இதற்காக தமிழ்ச் செல்வி தரகு பணமாக ரூ.1.20 லட்சம் பெற்றுள்ளார். இந்நிலையில், திருமணம் முடிந்த மறுநாள் ஜோதி லட்சுமி யாருக்கும் தெரியாமல் வீட்டிலிருந்து சென்றுவிட்டார். இதில், மனமுடைந்த சிவ சண்முகம் கடந்த 10-ம் தேதி நல்லூர் அருகே உள்ள அவரது சகோதரி வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுதொடர்பாக நல்லூர் போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தினர்.

விசாரணையில், ஜோதி லட்சுமிக்கு ஏற்கெனவே திருமணமாகி 2 குழந்தைகள் உள்ள நிலையில், திருமண இடைத்தரகர்கள் மூலம் சிவசண்முகம் போன்றவர்களை ஜோதிலட்சுமி ஏமாற்றி திருமணம் செய்வதும், பின்னர் திருமணமான மறுநாள் வீட்டில் உள்ள நகை, பணத்துடன் தப்பித் தலைமறைவாவதும் தெரியவந்தது.

இதையடுத்து, ஜோதி லட்சும் மற்றும் திருமண தரகர்களான தமிழ்ச் செல்வி, விருதுநகர் மாவட்டம் சிவகாசியைச் சேர்ந்த கஸ்தூரி பாண்டி (38), தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டியைச் சேர்ந்த வேல்முருகன் (55), சிவகங்கை மாவட்டம் திருப்புவனத்தைச் சேர்ந்த முத்து லட்சுமி (45), திருச்சியைச் சேர்ந்த சங்கர் (எ) நாராயணன் (56) ஆகிய 6 பேரை நல்லூர் போலீஸார் நேற்று கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in