

நாமக்கல் மாவட்டத்தை சேர்ந்தவர் ராகுல் (21). பி.டெக் முடித்து விட்டு சென்னை, திருமங்கலம் பகுதியில் தங்கியிருந்து ஒரு தனியார் நிறுவனத்தில் தொழிற்பயிற்சி கற்று வருகிறார். ராகுல் அவரது சொந்த தேவைக்காக சஞ்சய் என்பவரிடம் ரூ.85 ஆயிரம் வட்டிக்கு கடன் வாங்கியுள்ளார். கடந்த மாதம் ராகுல் வட்டி தொகை செலுத்தாததால், சஞ்சய் பணம் கேட்டு அவரை மிரட்டியுள்ளார்.
இந்நிலையில், கடந்த 2-ம் தேதி ராகுல் தங்கியிருந்த வீட்டுக்கு வந்த சஞ்சய் உட்பட சிலர், ராகுலிடம் வட்டி பணம் கேட்டு தகராறு செய்தனர். பின்னர், அவரை வலுக்கட்டாயமாக காரில் மண்ணூர்பேட்டைக்கு கடத்திச் சென்று தாக்கி, ராகுல் வீட்டிலிருந்த டிவி, அவரது பாஸ்போர்ட் மற்றும் சான்றிதழ்களை எடுத்து சென்றுள்ளனர்.
இது குறித்து, ராகுல் அளித்த புகாரின் பேரில், திருமங்கலம் போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி, ராகுலை கடத்தி சென்று தாக்கிய திருவண்ணாமலை மாவட்டத்தை சேர்ந்த சஞ்சய் (23), மண்ணூர்பேட்டையை சேர்ந்த தினேஷ் (22), சஞ்சீவ்குமார் (19), அம்பத்தூரை சேர்ந்த பிரதீப் (22) ஆகிய 4 பேரை கைது செய்தனர்.