பிஎஸ்என்எல் நிறுவனத்துக்கு ரூ.49 லட்சம் இழப்பு ஏற்படுத்திய 2 பேர் கைது

பிஎஸ்என்எல் நிறுவனத்துக்கு ரூ.49 லட்சம் இழப்பு ஏற்படுத்திய 2 பேர் கைது
Updated on
1 min read

சென்னை: பிஎஸ்என்எல் நிறுவனத்துக்கு ரூ.49 லட்சம் இழப்பு ஏற்படுத்திய வழக்கில் 19 ஆண்டுகளாக தலைமறைவாக இருந்த இருவர் கைது செய்யப்பட்டனர்.

சென்னை, கோடம்பாக்கம் நெடுஞ்சாலையில் செயல்படும் தனியார் நெட்வொர்க் நிறுவனமும், பாரிமுனையில் செயல்படும் மற்றொரு நிறுவனமும் 34 டெலிபோன் இணைப்புகளை பெற்று, டெலிபோன் பில் கட்டாததால் பிஎஸ்என்எல் நிறுவனத்துக்கு ரூ.49 லட்சம் இழப்பு ஏற்பட்டது. இதுகுறித்து பிஎஸ்என்எல் நிறுவனத்தின் சார்பில், சென்னை மத்திய குற்றப்பிரிவில் 2003-ல் புகார் அளிக்கப்பட்டது.

காவல் ஆணையர் உத்தரவுப்படி, மத்திய குற்றப்பிரிவில் உள்ள சைபர் க்ரைம் போலீஸார் 2003-ம் ஆண்டு மார்ச் மாதம் வழக்குப்பதிவு செய்தனர். இவ்வழக்கில் தொடர்புடைய ராமநாதபுரம் மாவட்டம் கீழக்கரையைச் சேர்ந்த சையது இப்ராஹிம் (55), முஹம்மது தாஹா யாசீன் ஹமீம் (52) ஆகிய இருவரை 2006-ல் கைது செய்தனர்.

சைதாப்பேட்டை நீதிமன்றத்தில் வழக்கு விசாரணை தொடர்ந்து நடைபெற்று வந்தது. இந்நிலையில், ஜாமீனில் வெளியே வந்த இருவரும் நீதிமன்றத்தில் ஆஜராகாமல் தலைமறைவாகினர். அவர்களை கைது செய்து ஆஜர்படுத்த 2006-ல் நீதிமன்றம் பிடியாணை பிறப்பித்தது. அவர்களை கைது செய்ய காவல் ஆணையர் அருண், மத்திய குற்றப்பிரிவு கூடுதல் காவல் ஆணையர் ராதிகா உத்தரவிட்டனர். இந்நிலையில், 19 ஆண்டுகளாக தலைமறைவாக இருந்த இருவரையும், சென்னை நுங்கம்பாக்கம் வள்ளுவர் கோட்டம் அருகே இருந்தபோது போலீஸார் கைது செய்தனர்.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in