ஓசூர் அருகே பயங்கரம்: 8-ம் வகுப்பு மாணவர் காரில் கடத்திக் கொலை - இரு இளைஞர்கள் கைது

இடது: சிறுவன் ரோகித் | வலது: போலீஸாருடன் உறவினர்கள் வாக்குவாதம்
இடது: சிறுவன் ரோகித் | வலது: போலீஸாருடன் உறவினர்கள் வாக்குவாதம்
Updated on
2 min read

ஓசூர்: அஞ்செட்டி அருகே காரில் கடத்தப்பட்ட பள்ளி மாணவர் கொலை செய்யப்பட்டு வனப்பகுதியில் வீசிச் சென்றது குறித்து இரு இளைஞர்களை கைது செய்து, அவர்களிடம் போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்தக் கொலை சம்பவத்தைக் கண்டித்து உறவினர்கள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

கிருஷ்ணகிரி மாவட்டம் அஞ்செட்டி அருகே மாவநட்டியை சேர்ந்த சிவராஜ் என்பவர் மகன் ரோகித் (13), இவர் அப்பகுதியில் உள்ள அரசுப் பள்ளியில் 8-ம் வகுப்பு படித்து வந்தார். இந்நிலையில், நேற்று மாணவர் ரோகித்துக்கு உடல்நிலை சரியில்லை என பள்ளி செல்லாமல் வீட்டில் இருந்தார். அப்போது அங்கிருந்த நண்பர்களுடன் நேற்று மாலை 4 மணிக்கு கிரிக்கெட் விளையாடச் சென்றார். பின்னர் இரவு ஆகியும் மாணவன் வீடு திரும்பவில்லை.

இதையடுத்து, பெற்றோர் அஞ்செட்டி காவல் நிலையத்தில் இரவு 8 மணிக்கு புகார் அளித்தனர். இந்நிலையில், காணாமல் போன மாணவரைக் கண்டுபிடித்து கொடுக்க கோரி ரோகித்தின் உறவினர்கள் 100-க்கும் மேற்பட்டோர் இன்று காலை அஞ்செட்டியில் சாலை மறியல் செய்தனர். இதனிடையே, போலீஸார் அப்பகுதியில் இருந்த சிசிடிவி கேமராவை வைத்து ஆய்வு செய்தபோது, மாணவரை சிலர் காரில் கடத்தி சென்றது தெரிய வந்தது.

சிசிடிவியில் அடையாளம் காணப்பட்ட இரு இளைஞர்களை போலீஸார் பிடித்து விசாரணை செய்ததில், மாணவன் ரோகித்தை கொலை செய்து தேன்கனிக்கோட்டை சாலையில் உள்ள திருமொடுக்கு கீழ்பள்ளம் வனப்பகுதியில் வீசியதாக அவர்கள் கூறியதாக தெரிகிறது. போலீஸார் வனப்பகுதிக்கு சென்றபோது, அங்கு காலில் வெட்டு காயங்களும் வயிற்றில் குத்தப்பட்டு மாணவர் ரோகித் கொலை செய்யப்பட்ட நிலையில் கிடந்தார்.

இதனையடுத்து, உடலை பிரேத பரிசோதனைக்காக போலீஸார் கொண்டு செல்ல முயன்றனர். ஆனால், உறவினர்கள் உடலை கொடுக்க மறுத்து, இதற்கு உடந்தையானவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். போலீஸார் உடனடியாக விசாரணை செய்யாமல் அலட்சியமாக இருந்ததாக கூறி, போலீஸாரை கண்டித்து தொடர்ந்து சாலை மறியலில் ஈடுபட்டனர். இதனால் அப்பகுதியில் பதற்றமான சூழல்நிலை நிலவுவதால், ஓசூர் ஏ.எஸ்.பி. அக்சய் அனில் வாகரே தலைமையில் போலீஸார் குவிக்கப்பட்டுள்ளனர்.

மேலும், மாணவரை கொலை செய்தற்கான காரணம் குறித்து கைது செய்யப்பட்ட இரு இளைஞர்களிடம் போலீஸார் விசாரணை செய்து வருகின்றனர். மாணவரை கடத்த பயன்படுத்திய கார் அப்பகுதியில் உள்ள பெட்ரோல் பங்கில் நிறுத்தப்பட்டு இருந்தது. அதனை போலீஸார் பறிமுதல் செய்தனர். சுமார் 3 மணி நேரத்துக்கு மேல் சாலை மறியல் நடந்து வருவதால் தேன்கனிக்கோட்டை, ஒகேனக்கல் சாலையில் போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது. இதனிடையே, கிருஷ்ணகிரி எஸ்.பி. தங்கதுரை சம்பவ இடத்துக்கு வந்துள்ளார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in