“உயரதிகாரிகள் யாரும் எங்களுக்கு உறவினர்களாக இல்லை!” - நிகிதா

உள்படம்: நிகிதா
உள்படம்: நிகிதா
Updated on
1 min read

மடப்புரம் கோயில் அருகே நகை திருட்டு நடந்ததாக புகார் தெரிவித்த நிகிதா மீது சில சந்தேகங்கள் எழுப்பப்பட்டன. இது தொடர்பாக நிகிதா கூறியதாவது: நான் தலைமறைவானதாக கூறுகின்றனர். நான் வீட்டில்தான் இருக்கிறேன்.

விசாரணைக்கு ஒத்துழைப்பு அளித்து வருகிறேன். அஜித்குமார் இறந்ததில் நானும், எனது தாயாரும் வேதனையில் உள்ளோம். கோயிலில் காரை பார்க்கிங் செய்வதற்கு முன்பு எனது தாயாருக்கு சக்கர நாற்காலியை எடுத்து வந்த அஜித்குமார் ரூ.500 கேட்டார். அப்போது வாக்குவாதம் ஏற்பட்டது.

பின்னர், கடைசியாக ரூ.100 தான் கொடுத்தேன். மற்றபடி அதற்கும், நான் அளித்த புகாருக்கும் சம்பந்தமில்லை. கோயிலுக்குச் சென்றுவிட்டு ஸ்கேன் மையத்துக்குச் செல்லவிருந்தோம். அதற்காகத்தான் ஏற்கெனவே பையில் கழற்றி வைத்திருந்த நகைகளை காரில் வைத்திருந்தோம். அது காணாமல் போனதால் புகார் கொடுத்தோம். உயர் அதிகாரிகள் யாரும் எங்களுக்கு உறவினர்களாக இல்லை. மற்றபடி என் மீது கூறப்படும் குற்றச்சாட்டுகள் பொய்யானவை. இவ்வாறு அவர் கூறினார்.

மடப்புரம் பத்திரகாளி கோயில் காவலாளி அஜித்குமார், தனிப் படை போலீஸார் தாக்குதலில் உயிரிழந்தார். இது தொடர்பாக மதுரை மாவட்ட நீதிபதி 12 மணி நேரம் விசாரணை நடத்தினார். சிவகங்கை மாவட்டம் மடப்புரம் பத்திரகாளியம்மன் கோயில் ஒப்பந்த காவலாளி அஜித்குமார் (29). இவரை கோயிலுக்கு வந்த பக்தர் நிகிதாவின் காரில் இருந்த 10 பவுன் நகை திருடுபோனது தொடர்பாக தனிப்படை போலீஸார் விசாரித்தனர்.

போலீஸார் தாக்கியதில் அஜித்குமார் உயிரிழந்தார். இது தொடர்பான வழக்கை விசாரித்த உயர் நீதிமன்ற மதுரை அமர்வு, மதுரை மாவட்ட 4-வது நீதிமன்ற மாவட்ட நீதிபதி ஜான் சுந்தர்லால் சுரேஷ் விசாரித்து அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவிட்டது.

அதன்படி நீதிபதி ஜான் சுந்தர்லால் சுரேஷ் நேற்று காலை 10.20 மணிக்கு திருப்புவனம் காவல் நிலையம் அருகிலுள்ள நெடுஞ்சாலைத் துறை ஆய்வு மாளிகைக்கு வந்தார். பின்பு 10.45 மணியளவில் விசாரணையை தொடங்கினார். இதில் ஏடிஎஸ்பி சுகுமாறன், திருப்புவனம் ஆய்வாளர் ரமேஷ்குமார் ஆகியோரிடம் விசாரித்தார்.

தனிப்படை போலீஸாரின் தாக்குதலை கழிப்பறையில் மறைந்திருந்து செல்போனில் வீடியோ எடுத்த கோயில் பணியாளர், கோயில் அலுவலக உதவியாளர், கோயில் பணியா ளர்கள், ஆட்டோ ஓட்டுநர்,கோயில் பாதுகாப்பு அலுவலர், அஜித்குமார் தரப்பு வழக்கறிஞர் கணேஷ்குமார் ஆகியோரிடமும் நீதிபதி விசாரித்தார். நேற்று 12 மணி நேரம் நீதிபதி விசாரணை நடத்தினார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in