

சென்னை: போதைப்பொருள் பயன்படுத்திய வழக்கில் நடிகர் ஸ்ரீகாந்த்தை சென்னை - நுங்கம்பாக்கம் போலீஸார் கைது செய்துள்ளனர். இந்த வழக்கில் திரையுலகைச் சேர்ந்த வேறு யாருக்காவது தொடர்பு இருக்கிறதா என்பது குறித்து அவரிடம் போலீஸார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
சென்னையைச் சேர்ந்த பிரசாத் என்பவரிடமிருந்து நடிகர் ஸ்ரீகாந்த் போதைப்பொருள் வாங்கியதாக கூறப்படுகிறது. அவரிடமிருந்து 12 ஆயிரம் ரூபாய் மதிப்பிலான ஒரு கிராம் போதைப் பொருளை நடிகர் ஸ்ரீகாந்த் 40 முறைக்கு மேல் வாங்கிப் பயன்படுத்தி வந்ததாக கூறப்படுகிறது. அதற்கான பணப்பரிவர்த்தனை கூகுள் பே மூலம் நடந்துள்ளதாகவும் தெரிகிறது.
இது குறித்து விசாரணை நடத்திய சென்னை - நுங்கம்பாக்கம் போலீஸார், இன்று காலை 8 மணிக்கு, நடிகர் ஸ்ரீகாந்த்தை காவல் நிலையம் அழைத்து வந்து விசாரணை நடத்தினர். இந்த விசாரணையின்போது, அவருடைய ரத்த மாதிரிகள் சேகரிக்கப்பட்டு, மருத்துவப் பரிசோதனையும் நடத்தப்பட்டது. இதில் நடிகர் ஸ்ரீகாந்த் போதைப்பொருள் பயன்படுத்தியது உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து நுங்கம்பாக்கம் போலீஸார், நடிகர் ஸ்ரீகாந்த்தை கைது செய்துள்ளனர்.
மேலும், இந்த போதைப்பொருள் வழக்கில் யார் யாருக்கெல்லாம் தொடர்பு இருக்கிறது? திரையுலகைச் சேர்ந்தவர்கள் வேறு யாருக்காவது தொடர்பு இருக்கிறதா என்பது குறித்து நுங்கம்பாக்கம் போலீஸார் தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். போதைப்பொருள் வழக்கில் ஏற்கெனவே பிரசாத் என்பவர் கைது செய்யப்பட்டுள்ளார். அவரிடம் போலீஸார் நடத்திய விசாரணையில், போதைப்பொருள் வழக்கில் நடிகர் ஸ்ரீகாந்த்துக்கு தொடர்பு இருப்பது தெரியவந்ததாக கூறப்படுகிறது.
நடிகர் ஸ்ரீகாந்த் தமிழ், தெலுங்கு, கன்னடம் மற்றும் மலையாளம் உள்பட பல்வேறு மொழிகளில் 100-க்கும் மேற்பட்ட திரைப்படங்களில் நடித்துள்ளார். கடந்த 2002-ம் ஆண்டு தமிழில் வெளிந்த ‘ரோஜாக்கூட்டம்’ திரைப்படம் அவருக்கு வெற்றிப் படமாக அமைந்தது. தொடர்ந்து ‘ஏப்ரல் மாதத்தில்’, ‘மனசெல்லாம்’, ‘பார்த்திபன் கனவு’, ‘கணா கண்டேன்’, ‘பம்பரக்கண்ணாலே’, ‘உயிர்’, ‘ஒரு நாள் ஒரு கனவு’, ‘பூ’, ‘போஸ்’, ‘ஜூட்’,‘சதுரங்கம்’ உள்பட பல்வேறு திரைப்படங்களில் நடித்துள்ளார். 2012-ல் இயக்குநர் ஷங்கரின் இயக்கத்தில் வெளிவந்த ‘நண்பன்’ திரைப்படத்தில், நடிகர் விஜய்யின் நண்பராக ஸ்ரீகாந்த் நடித்திருப்பார்.