

திண்டுக்கல்; ஒட்டன்சத்திரம் அருகே மகள் வேறு ஒருவருடன் சென்றதால், அவரின் தாய், பாட்டி ஆகியோர் இரண்டு பேத்திகளையும் கொலை செய்து விட்டு, தாங்களும் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அப்பகுதிவாசிகள் மத்தியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
திண்டுக்கல் மாவட்டம் ஒட்டன்சத்திரம் அடுத்த இடையகோட்டை அருகேயுள்ள சின்ன குளிப்பட்டியைச் சேர்ந்தவர் பவித்ரா (27). இவர் கணவர் பிரபாகரனுடன் பள்ளபட்டி அருகே சவுந்தராபுரத்தில் வசித்து வந்தார். இவர்களுக்கு 2 மகள்கள் இருந்தனர். தம்பதி இடையே அடிக்கடி தகராறு ஏற்படுவதும், தொடர்ந்து பவித்ரா தன் தாய் வீட்டுக்கு வந்துவிடுவதும் வாடிக்கையாக இருந்துவந்துள்ளது.
அவ்வாறாக கடந்த சில மாதங்களுக்கு முன்பு கணவரைப் பிரிந்து வந்த பவித்ரா, தனது மகள்கள் லித்திக்ஸா ( 8 ), தீப்திகா ( 5 ) ஆகியோருடன் சின்னக் குளிப்பட்டியில் உள்ள தனது தாய் காளீஸ்வரி வீட்டில் வசித்து வந்தார். நேற்று (ஜூன் 17) வீட்டில் இருந்து வெளியே சென்ற பவித்ரா வீடு திரும்பாததால் அவரைத் தேடினர். இந்நிலையில் அவர் வேறு ஒருவருடன் சென்றது தெரியவந்தது.
இதனால் மனமுடைந்த காளீஸ்வரி (47) தனது தாய் செல்லம்மாள் (65) உடன் சேர்ந்து, பேத்திகள் லித்திக்ஸா, தீப்திகா ஆகியோரை கொலை செய்து தூக்கில் தொங்கவிட்டு, தாங்களும் தூக்குப் போட்டு தற்கொலை செய்து கொண்டனர்.
இன்று (ஜூன் 18) புதன்கிழமை காலை தகவல் அறிந்து வந்த ஒட்டன்சத்திரம் டிஎஸ்பி கார்த்திகேயன் தலைமையிலான போலீஸார் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக , திண்டுக்கல் அரசு மருத்துவக் கல்லூரிக்கு அனுப்பிவைத்தனர். ஒரே குடும்பத்தைச் சேர்ந்த, நான்கு பேர் பலியான சம்பவம், அந்த கிராமத்தில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. காணாமல் போன பவித்ராவை இடையகோட்டை போலீஸார் தேடி வருகின்றனர்.