

செங்கல்பட்டு தனியார் பள்ளியில் பெண் ஊழியரிடம் பாலியல் சீண்டலில் ஈடுபட்ட தாளாளர் பணியிட மாற்றம் செய்யப்பட்டார்.
செங்கல்பட்டு வேதாச்சலம் நகரில் ஒரு தனியார் பள்ளி இயங்கி வருகிறது. சேலம் அருகே ஏற்காட்டை தலைமையிடமாக கொண்டு இயங்கும் இப்பள்ளியில் 1,000-க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் பயின்று வருகின்றனர். 30-க்கும் மேற்பட்ட ஆசிரியர்கள் மற்றும் 10-க்கும் மேற்பட்ட அலுவலக ஊழியர்கள் பணியாற்றி வருகின்றனர்.
கடந்த 3 ஆண்டுகளாக ஒருவர் தாளாளராக பணியாற்றி வந்தார். கடந்த 30-ஆம் தேதி பள்ளி விடுமுறை நேரத்தில் மாணவ, மாணவிகள் சேர்க்கை நடைபெற்றது. அப்போது பள்ளி அலுவலகத்தில் பணிபுரியும் இளம் பெண்ணிடம் தாளாளர் பாலியல் சீண்டலில் ஈடுபட்டுள்ளார். இது குறித்து பெற்றோரிடம் பெண் தெரிவித்தாள்.
இந்நிலையில் இது தொடர்பாக பெற்றோர் காவல் இனத்தில் புகார் அளிக்க இருந்த நிலையில் உள்ளூர் முக்கிய பிரமுகர்கள் ஒன்று கூடி தாளாளருக்கு ஆதரவாக பெண்ணின் குடும்பத்தாருக்கு அழுத்தம் கொடுத்து பேரம் பேசி நிலைமையை சரி செய்தனர்.
மேலும், இந்த விவகாரம் அடுத்த நிலைக்கு செல்லாமல் இருக்க தாளாளரை பணியிட மாற்றம் செய்ய வேண்டும் என பள்ளி நிர்வாகத்துக்கு அரசியல் கட்சி நிர்வாகிகள் அழுத்தம் கொடுத்தனர். இதனை அடுத்து பள்ளித் தாளாளர் பணியிட மாற்றம் செய்யப்பட்டார். இதனிடையே இந்த பிரச்சினையை வெளியே சொன்னதால் அந்த பெண் பணி நீக்கம் செய்யப்பட்டதாக கூறப்படுகிறது.
இந்த விவகாரம் பள்ளி படிக்கும் மாணவர்கள், பெற்றோரிடம் அதி்ர்ச்சியை ஏற்படுத்திய நிலையில் மாணவர்களின் பெற்றோர், பள்ளி நிர்வாகத்திடம் இது குறித்து கேள்வி எழுப்பி உள்ளனர். பள்ளி நிர்வாகம் இனிமேல் இது போல் சம்பவங்கள் நடைபெறாது என உறுதி அளித்ததாக தெரிகிறது.