மதுரை வி.சத்திரப்பட்டி காவல் நிலையம் சூறை; காவலர் சிறைவைப்பு - நடந்தது என்ன?

வி.சத்திரப்பட்டிக்கு செல்ல போலீஸார் அனுமதி மறுத்ததால் அதிமுக முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் உள்ளிட்டோர் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
வி.சத்திரப்பட்டிக்கு செல்ல போலீஸார் அனுமதி மறுத்ததால் அதிமுக முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் உள்ளிட்டோர் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
Updated on
2 min read

மதுரை: திருமங்கலம் அருகே வி.சத்திரப்பட்டி காவல் நிலையத்துக்கு நேற்று (ஜூன் 13) நள்ளிரவில் சென்ற கும்பல், அங்கு பணியில் இருந்த காவலரை உள்ளே வைத்து பூட்டி சிறை வைத்துள்ளது. இச்சம்பவம் குறித்து போலீஸார் விசாரித்து வருகின்றனர்.

மதுரை மாவட்டம் பேரையூர் அருகே சில மாதங்களுக்கு முன்பு காதல் விவகாரத்தில் இளைஞர் ஒருவர் கண்மாய் கரையில் மர்மமான முறையில் தலை துண்டிக்கப்பட்டு கொலை செய்யப்பட்டார். இவ்வழக்கில் வி.சத்திரபட்டி அருகிலுள்ள வெங்கடாசலபுரம் பகுதியைச் சேர்ந்த பிரபாகரன் என்பவர் உள்ளிட்ட சிலர் மீது போலீஸார் வழக்குப் பதிவு செய்தனர். இந்த வழக்கில் கைது செய்யப்பட்ட பிரபாகரன் தற்போது ஜாமீனில் உள்ளார்.

இந்நிலையில், நேற்று பகலில் திண்டுக்கல் போலீஸார் வழக்கு ஒன்று தொடர்பாக பிரபாகரன் வீட்டுக்கு சென்றுள்ளனர். அங்கிருந்த அவரது தந்தை முத்துவேலுவிடம் வழக்கு விசாரணை தொடர்பாக பிரபாகரன் எங்கே என்று கேட்டுள்ளனர். அவர் வெளியே சென்றிருப்பதாக பிரபாகரனின் தந்தை கூறியிருக்கிறார். இதையடுத்து போலீஸார் அங்கிருந்து திரும்பியுள்ளனர்.

பின்னர் வீட்டுக்கு வந்த பிரபாகரனிடம் நடந்த விவரத்தை அவரது தந்தை கூறியுள்ளார். இதனால், ஆத்திரமடைந்த பிரபாகரன் தனது கூட்டாளிகளுடன் சேர்ந்து வி.சத்திரப்பட்டி காவல் நிலையத்துக்கு நள்ளிரவில் சென்றுள்ளார்.

அங்கு இரவுப் பணியில் பால்பாண்டி என்ற காவலர் ஒருவர் மட்டும் இருந்துள்ளார். அவரிடம் பிரபாகரன் தலைமையில் சென்ற கும்பல் வாக்குவாதம் செய்துள்ளனர். மேலும், அவர்கள் காவல் நிலையத்தில் இருந்த மேஜை உள்ளிட்ட பொருட்களை தள்ளிவிட்டு சேதப்படுத்தி சூறையாடியதாக கூறப்படுகிறது. தொடர்ந்து பணியில் இருந்த காவலர் பால்பாண்டியை காவல் நிலையத்துக்குள் வைத்து வெளியே பூட்டு போட்டுவிட்டு அந்த கும்பல் அங்கிருந்து தப்பிச் சென்றதாக கூறப்படுகிறது.

நீண்ட நேரத்துக்குப் பிறகு போலீஸாரை வரவழைத்து காவலர் பால்பாண்டி வெளியே வந்திருக்கிறார். இச்சம்பவம் தொடர்பாக பிரபாகரன் உள்ளிட்ட அவரது கூட்டாளிகளை வி.சத்திரப்பட்டி போலீஸார் தேடி வருகின்றனர். மாவட்ட காவல் கண்காணிப் பாளர் அரவிந்த், டிஎஸ்பி சந்திரசேகரன் உள்ளிட்ட காவல்துறை அதிகாரிகள் சத்திரபட்டி காவல் நிலையத்துக்கு நேரில் சென்று விசாரணை மேற்கொண்டனர். இச்சம்பவம் மதுரையில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

அதிமுக போராட்டம்: காவல் நிலையத்துக்குள் காவலர் ஒருவரை சிறை வைத்த சம்பவத்தால் அப்பகுதி மக்கள் அச்சம் அடைந்துள்ளனர். இந்நிகழ்வு குறித்து அறிந்த முன்னாள் அமைச்சரும், திருமங்கலம் தொகுதி எம்எல்ஏ-வுமான ஆர்பி.உதயகுமார் பொதுமக்களுக்கு ஆறுதல் கூறுவதற்காக தனது கட்சியினருடன் இன்று (ஜூன் 14) காலை அங்கு சென்றார். அப்போது, என்.முத்துலிங்கபுரம் பகுதியிலேயே போலீஸார் அவரை தடுத்து நிறுத்தினர்.

இதையடுத்து ஆர்.பி.உதயகுமார் மற்றும் அதிமுகவினர், அங்கிருந்த மரத்தடியில் அமர்ந்து போராட்டம் நடத்தினர். பொதுமக்களை சந்திக்க தங்களை அனுமதிக்க வேண்டும் என கோரிக்கை விடுத்தனர். காவல்துறை அதிகாரிகளும் அவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். ஆனாலும், அவர்கள் கேட்கவில்லை. இதையடுத்து போலீஸார் அவர்களை கைது செய்து அருகிலுள்ள திருமண மண்டபத்தில் அடைத்தனர். இச்சம்பவம் அப்பகுதியில் பதற்றமான சூழலை ஏற்படுத்தியதால், அங்கு போலீஸார் குவிக்கப்பட்டுள்ளனர்.

காவல் துறை கூறுவது என்ன? - இது குறித்து காவல் கண்காணிப்பாளர் அலுவலகம் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு: ‘வி.சத்திரப்பட்டி காவல் நிலையத்தில் நேற்று இரவு பாரா பணியில் காவலர் பால்பாண்டி இருந்தபோது, அடையாளம் தெரியாத இருவர் காவல் நிலையத்துக்குள் அத்துமீறி நுழைந்துள்ளனர். அவர்கள் பணியில் இருந்த காவலரிடம் வாய்த்தகராறில் ஈடுபட்டுள்ளனர். தொடர்ந்து காவல் நிலையில் இருந்த கணனி உள்ளிட்ட பொருட்களை சேதப்படுத்தி விட்டு தப்பியுள்ளனர்.

பிரபாகரன் தந்தை முத்துவேல் என்பவரை திண்டுக்கல் மாவட்ட காவல் துறையினர் வழக்கு ஒன்றில் விசாரிக்க அழைத்துச் சென்றதாக தவறாக கருதிய நிலையில், ஆத்திரத்தில் பிரபாகரன் நண்பருடன் சேர்ந்து இச்செயலில் ஈடுபட்டுள்ளார். தலைமறைவாக உள்ள இருவரையும் பிடிக்க, டிஎஸ்பி சந்திரசேகர் தலைமையில் 4 தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளன’ என்று அதில் கூறப்பட்டுள்ளது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in