

கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரியில் போலி சான்றிதழ் கொடுத்து நீதிமன்ற பணியில் சேர முயற்சித்தவர் உட்பட 2 பேரை நகர போலீஸார் கைது செய்தனர்.
கிருஷ்ணகிரி நகரில் உள்ள சேலம் சாலையை சேர்ந்தவர் ஹரிஹரன் (27). எம்எஸ்சி கணிதம் முடித்து விட்டு அரசு பணிக்கு முயற்சி செய்து வந்தார். கடந்த 2024-ம் ஆண்டு ஏப்ரல் மாதம் காஞ்சிபுரம் நீதிமன்றத்தில் பல்வேறு பணிகளுக்கான அறிவிப்பு வந்தது. அதில், ‘பிராசஸ் சர்வர்’ எனப்படும் சம்மன் வழங்கும் பணிக்கு ஹரிஹரன் விண்ணப்பித்தார். இப்பணிக்கு, கடந்த 2025 மார்ச் மாதம் சென்னை உயர் நீதிமன்றத்தில் நேர்காணல் நடந்தது.
இதில் கலந்து கொண்ட ஹரிஹரன், கல்வி சான்றிதழ்களுடன், பணி முன்னுரிமைக்கான, முன்னாள் படைவீரர், மாற்றுத்திறனாளி சான்றிதழையும் வழங்கியதாக தெரிகிறது. சான்றிதழ் சரிபார்க்கும் பணியின்போது, ஹரிஹரனின் சான்றிதழ் மீது சந்தேகம் ஏற்பட்டிருந்த நிலையில், இது குறித்து விசாரிக்குமாறு சென்னை உயர்நீதிமன்ற பொது பதிவாளர் அல்லி, கிருஷ்ணகிரி எஸ்.பி, தங்கதுரைக்கு அஞ்சல் மூலம் புகார் அளித்தார்.
இதுதொடர்பாக எஸ்.பி. உத்தரவின்படி, கிருஷ்ணகிரி நகர போலீஸார் விசாரித்ததில், ஹரிஹரன் நீதிமன்ற பணிக்காக போலி சான்றிதழ் கொடுத்தது தெரியவந்தது. அவரிடம் மேற்கொண்ட விசாரணையில், கிருஷ்ணகிரி பாரதியார் நகரை சேர்ந்த ராஜேந்திரன் (52) என்பவர், பணம் பெற்றுக் கொண்டு ஹரிஹரனுக்கு போலி சான்றிதழ்களை தயார் செய்து கொடுத்ததும் தெரியவந்தது.
தொடர்ந்து, ராஜேந்திரன் வீட்டை போலீஸார் சோதனை செய்ததில், போலி சான்றிதழ்கள் தயாரிக்கப் பயன்படுத்திய ஆவணங்கள், ரப்பர் ஸ்டாம்புகள், சீல்கள், கம்ப்யூட்டர், பிரிண்டர்கள், பச்சை நிற பேனா உள்ளிட்டவை இருந்தன. மேலும், 10-க்கும் மேற்பட்ட சான்றிதழ்களின் நகல்களும் இருந்தது. இதையடுத்து அவர்கள் 2 பேரையும் போலீஸார் இன்று (ஜூன் 11) கைது செய்தனர்.
இதில், கைதான ராஜேந்திரன் கடந்த 2000-ம் ஆண்டு போலி சான்றிதழ் கொடுத்து தருமபுரியில் ஆசிரியர் பணியில் சேர்ந்துள்ளார். பின்னர் இது குறித்து கண்டறியப்பட்டு, நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. பணம் பெற்றுக்கொண்டு போலி சான்றிதழ் வழங்கியதாக அவர் மீது, கிருஷ்ணகிரி, தருமபுரி மாவட்ட காவல் நிலையங்களில் 4 வழக்குகள் நிலுவையில் உள்ளது என போலீஸார் தெரிவித்தனர்.