

திருத்தணி: திருத்தணி அரசு மருத்துவமனை அருகே முட்புதரில் வீசப்பட்ட பச்சிளம் குழந்தை மீட்கப்பட்டுள்ளது.
திருவள்ளூர் மாவட்டம், திருத்தணியில் மாவட்ட அரசு தலைமை மருத்துவமனை எங்கே செயல்படு வருகிறது. இந்நிலையில், இன்று அதிகாலை அரசு மருத்துவமனை அருகே உள்ள முட்புதரில் குழந்தை அழும் சத்தம் கேட்டுள்ளது. இதையடுத்து, மருத்துவமனை அருகே வசிக்கும் இளங்கோ என்பவர் முட்புதர் பகுதிக்கு சென்று பார்த்துள்ளார். அப்போது பிறந்து சில மணி நேரங்களே ஆன பெண் குழந்தை இருந்ததைக் கண்டு அதிர்ச்சி அடைந்துள்ளார்.
தொடர்ந்து அவர் குழந்தையை மீட்டு திருத்தணி அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றார். அங்கு பச்சிளம் குழந்தைகள் பிரிவில் குழந்தை அனுமதிக்கப்பட்டு தீவிர சிகிச்சை பெற்று வருகிறது. குழந்தை நலமுடன் இருப்பதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். இச்சம்பவம் குறித்து திருத்தணி போலீஸார் வழக்குப் பதிவு செய்து, முட்புதரில் பச்சிளம் குழந்தையை வீசி சென்ற மர்ம நபர்களை தீவிரமாக தேடி வருகின்றனர்.