

ராஜஸ்தானின் ரயில்வே நிலையம் ஒன்றில் தாயுடன் உறங்கிக் கொண்டிருக்கும் குழந்தை ஒன்று கடத்தப்படுகிறது. பதறித்துடிக்கும் தாய், அந்த ரயில் நிலையத்தில் தாமதமாக வந்திறங்கும் ஒருவர் மீது சந்தேகப்படுகிறார். உண்மையில் அங்கு என்ன நடந்தது? குழந்தையை கடத்தியது யார்? குழந்தை மீட்கப்பட்டதா, இல்லையா என்பதுதான் ‘ஸ்டோலன்’ (Stolen) படத்தின் ஒன்லைன்.
கவுரவ் திங்ரா, சுவப்னில் சால்கர் அகதம்ப் ஆகியோருடன் இணைந்து எழுதி இயக்குநர் கரன் தேஜ்பால் இயக்கியிருக்கும் இந்தி திரைப்படம் ‘ஸ்டோலன்’. சமூக ஊடகத்தில் பரப்பிவிடப்படும் பொய்ச் செய்திகள் சமூகத்தில் ஏற்படுத்தக்கூடிய பாதிப்பை ஒளிவுமறைவின்றி பதிவு செய்த இயக்குநரை எத்தனை முறை பாராட்டினாலும் தகும். இதுபோன்ற பொய்ச் செய்திகளுக்கு இரையாகும் மனித மனங்கள், அந்த செய்தியின் உண்மைத் தன்மையை சோதிப்பதற்குப் பதிலாக, தீர்ப்பு எழுத தயாராகிவிடுவதை சமரசமின்றி பதிவு செய்திருக்கிறார் இயக்குநர்.
தூங்கிக் கொண்டிருக்கும் ஓர் குழந்தையின் முகத்துக்கு டைட் குளோஸ் போகும் முதல் ஷாட் துவங்கி, மருத்துவமனையில் சிகிச்சையில் கவுதம் அமர்ந்திருக்கும் கடைசி ஃப்ரேம் வரை படத்தை விறுவிறுப்புக் குறையாமல் நகர்த்தி சபாஷ் போட வைத்திருக்கிறார் இயக்குநர் கரன் தேஜ்பால். முன்கதை, கிளைக்கதை என்று எதுவுமில்லாமல், இயல்பாக நடக்கும் சம்பவங்களின் கோர்வை படத்தை யதார்த்தமாக்கி ரசிக்க வைக்கிறது. நொடிக்கு நொடி சீட்டின் நுனிக்கு நகர்த்தும் காட்சிகளால் படத்தை எந்த இடத்திலும் நெருடலின்றி காட்சிப்படுத்திய விதம் வியப்பளிக்கிறது.
ராஜஸ்தான் மாநிலத்தில் இருக்கும் சிறிய நகரமொன்றின் ரயில் நிலையத்தின் வெளியே தனது தம்பியின் வருகைக்காக காரில் காத்திருக்கிறார் கவுதம் (அபிஷேக் பானர்ஜி). தான் பயணிக்க வேண்டிய விமானத்தை தவறவிட்டதால், ரயில் மூலம் அங்கு வந்திறங்குகிறார் கவுதமின் தம்பி ரமன் (ஷுபம் வர்தன்). அப்போது ரயில் நிலையத்தில் தனது தாய் ஜும்பா (மியா மால்செர்) உடன் உறங்கிக்கொண்டிருக்கும் 5 மாத பெண் குழந்தை கடத்தப்படுகிறது. இதனால் பதறித்துடிக்கும் ஜும்பா, ரயில் நிலையத்தில் வந்திறங்கிய ரமன் மீது சந்தேகப்படுகிறார்.
இதனால், அங்கிருந்த பிற பயணிகள் அவர் மீது தாக்குதல் நடத்த, கவுதம் அதை தடுத்து சண்டையிட அந்த இடமே களேபரமாகிறது. அப்போது, அங்கு வரும் காவல் துறையினர், ரமனை இந்த வழக்கின் சாட்சியாக சேர்க்கின்றனர். இந்தச் சம்பவத்தில் இருந்து விடுபட்டு, சீக்கிரமாக வீட்டுக்குச் செல்ல முயல்கிறார் ரமனின் அண்ணன் கவுதம். இதனிடையே, இந்த குழந்தை திருட்டில் ரயில் நிலையத்தில் டீக்கடை வைத்திருக்கும் நபர் ஈடுபட்டிருப்பது தெரிந்து போலீஸார் அவரை கைது செய்து விசாரிக்கின்றனர்.
இதனிடையே, ரமன்,கவுதம், ஜும்பா மற்றும் கவுதமின் கார் அடங்கிய வீடியோ ஒன்று குழந்தைக் கடத்தல் கும்பல் என்ற பெயரில் வைரலாகிவிடுகிறது. உண்மையில் குழந்தையை கடத்தியது யார்? ரமன், கவுதமை காவல் துறை விடுவித்தார்களா? ஜும்பா யார்? மாயமான குழந்தையை காவல்துறை மீட்டதா? இல்லையா? என்பதாக விரிகிறது இப்படத்தின் கதை. இந்தப் படத்தின் ஆகச் சிறந்த பலம் படத்தின் திரைக்கதை. பரபரக்கும் அதன் வேகத்தில், படத்தில் கதாப்பாத்திரங்களைப் போல நாமும் நம்மை ஆசுவாசப்படுத்திக் கொள்ளும்படி அருமையாக அமைக்கப்பட்டிருக்கிறது.
அதுபோல், அனல் பறிக்கும் இந்த திரைக்கதைக்கு படத்தின் தொழில்நுட்பக் குழு உறுதுணையாக வலு சேர்த்திருக்கிறது. அதிலும் ஒளிப்பதிவாளர் இஷான் கோஷின் காட்சிப்பதிவு செம்ம. ஓர் இரவில் சிறிய நகரத்தின் ரயில்வே ஸ்டேஷன், ஊருக்கு ஒதுக்குப்புறமான காடு என கிட்டத்தட்ட ஒரு மணி நேரம், இரவின் குளுமையையும், ரமன், கவுதம், ஜும்பா, காவல் துறையினர் ஆகியோரது பதைபதைப்பையும் ஒளிப்பதிவாளர் நேர்த்தியாக காட்சிப்படுத்தியிருக்கிறார். அதிலும், இருட்டில் விளக்குகள் அணைக்கப்பட்ட எஸ்யுவி காரின் இன்டிகேட்டர் லைட் பேக்கிரவுண்டில் வரும் காட்சிகள் எல்லாம் அற்புதங்களைச் செய்திருக்கிறது இஷான் கோஷின் கேமரா.
அர்பத் போன்டியின் பின்னணி இசை படத்துக்கு பலம் சேர்க்கிறது. பாடல்கள் இல்லாதது படத்தின் பெரிய ப்ளஸ். ஷ்ரேயஸ் பெல்டாங்டியின் கட்ஸ் படத்துக்கு சுவாரஸ்யப்படுத்தியிருக்கிறது.
அபிஷேக் பானர்ஜி, ஷுபம் வர்தன் மற்றும் மியா மால்செர் இவர்கள் மூவரும்தான் இந்தப் படத்தின் பிரதான பாத்திரங்கள். மூன்று பேருமே போட்டிப்போட்டு நடித்துள்ளனர். ஒரு காட்சியில் ஒருவர் ஸ்கோர் செய்தால், மற்றொரு காட்சியில் மற்றவர்கள் என படம் முழுக்க அவர்களது மிகையற்ற நடிப்பு பல இடங்களில் வெகுவாக ஈர்த்திருக்கிறது.
இந்தப் படம் ஓர் உண்மைச் சம்பவத்தை அடிப்படையாக கொண்டது. கடந்த 2018-ம் ஆண்டு பிஹாரைச் சேர்ந்த குழந்தை கடத்தல்காரர்கள் 5 பேர், அசாம் மாநிலம் கர்பி கிராமத்துக்குள் நுழைந்திருப்பதாக வாட்ஸ் அப் உள்ளிட்ட சமூக ஊடகங்களில் பொய் செய்தி ஒன்று கண், காது, மூக்கு முளைத்து காட்டுத் தீ போல பரவியிருக்கிறது. இதனால் அப்பகுதி மக்கள் பதற்றத்தில் இருந்துள்ளனர். அங்கு வரும் புதிய நபர்களை அதிக சந்தேகத்துடன் பார்க்கத் தொடங்கியுள்ளனர். அவ்வாறு பரப்பிவிடப்பட்ட வதந்தியில் கடத்தல்காரர்களில் ஒருவனது தலைமுடி நீண்டதாக இருக்கும் என்று சொல்லப்பட்டிருக்கிறது.
கடந்த 2018-ம் ஆண்டு ஜூன் 8-ம் தேதி, ஆடியோ இன்ஜினியரான நிலோத்பால் தாஸ், தன்னுடைய நண்பரும் டிஜிட்டல் ஆர்ட்டிஸ்டுமான அபிஜித் நாத் உடன் அந்தப் பகுதிக்கு சுற்றுலா சென்றிருந்தனர். உள்ளூர் அருவியில் இருந்து அவர்கள் இருவரும் திரும்பி வந்தபோது, ஓரிடத்தில் வழி கேட்டுள்ளனர். கர்பியின் பஞ்சூரி கச்சாரிக்கானைச் சேர்ந்த கிராமத்தினர் அவர்கள் இருவரையும் சூழ்ந்து கொள்ள நிலைமை மோசமாகிறது.
சில நிமிடங்களில் அங்கு நூற்றுக்கணக்கானோர் திரண்டு விடுகின்றனர். காரிலிருந்து நிலோத்பால் தாஸ் மற்றும் அபிஜித் நாத்தை வெளியே பிடித்து இழுத்து அவர்களை கட்டிப்போட்டு தாக்குதல் நடத்தப்படுகிறது. ரத்தம் சொட்ட சொட்ட நிலோத்பால் தாஸ், தான் ஒரு அசாமி என்று கெஞ்சி கதறியும் அந்த கும்பல் எதையும் காதில் வாங்காமல் இருவரையும் அடித்தே கொன்று போடுகிறது.
இந்த வழக்கை விசாரித்த போலீஸார் பொய்ச் செய்தி பரப்பியவர் உட்பட கும்பல் வன்முறையில் ஈடுபட்ட 40-க்கும் மேற்பட்டவர்களை கைது செய்தனர். ஆனால், போதுமான சாட்சிகள் இல்லாததால் இவர்கள் அனைவருமே பிணையில் விடுவிக்கப்பட்டனர். கொலை செய்யப்பட்ட அப்பாவிகளான நிலோத்பால் தாஸ் மற்றும் அபிஜித் நாத்தின் பெற்றோர் நீதிக்கான போராட்டத்தில் காத்திருக்கின்றனர்.
இந்த உண்மைச் சம்பவத்தை தழுவிதான், இயக்குநர் கரன் தேஜ்பால், இந்த ‘ஸ்டோலன்’ திரைப்படத்தை இயக்கியிருக்கிறார். உண்மையா பொய்யா என்பது தெரியாமல், சமூக ஊடகங்களில் பகிரப்படும் தகவல்களை நம்பி உருவாகும் கும்பல் மனநிலையின் அகோரத்தை உரக்கப் பேசுகிறது இந்த ‘ஸ்டோலன்’ போன்ற திரைப்படங்கள் நிகழ்கால சமூகத்தின் தேவையாக இருக்கிறது. இனி பேருந்து நிலையத்திலோ, ரயில் நிலையத்திலோ தாயுடன் உறங்கும் குழந்தையைப் பார்க்கும்போது, ஜும்பாவின் முகம் உங்கள் நினைவுக்கு வந்தால், அதுதான் இந்த ‘ஸ்டோலன்’ திரைப்படம். அமேசான் ப்ரைம் ஓடிடி தளத்தில் இந்த திரைப்படம் காணக் கிடைக்கிறது.