

மதுரை: மதுரையில் தங்கும் விடுதி ஒன்றில் கணவன், மனைவி இருவரும் விஷம் குடித்து தற்கொலை செய்துகொண்டனர். அறையில் எழுதி வைத்திருந்த கடிதத்தைக் கைப்பற்றி போலீஸார் விசாரிக்கின்றனர்.
ஈரோடு மாவட்டம், கோபிச்செட்டிப்பாளையம் மாதேசுவரன் கோயில் தெருவைச் சேர்ந்தவர் பாஸ்கரன் (63). நெல் அறுவடை செய்யும் இயந்திரங்களை வாடகைக்கு விடும் தொழில் செய்து வந்தார். ஏற்கெனவே இவர் சாந்தி என்பவரை திருமணம் செய்திருந்த நிலையில், கவிதாமணி (45) என்பவரை இரண்டாவதாக திருமணம் செய்து கோவை மாவட்டம் சூலூர் அருகேயுள்ள குரும்பபாளையத்தில் வசித்து வந்தார்.
இந்நிலையில் பாஸ்கரன், கவிதாமணி இருவரும் தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற வந்துள்ளதாகக் கூறி கடந்த 1-ம் தேதி மதுரை மாட்டுத்தாவணி பகுதியில் உள்ள தனியார் விடுதியில் அறை எடுத்துத் தங்கினர். அறையைக் காலி செய்யும் நாள் வந்ததால் இன்று (ஜூன் 4) காலை விடுதி நிர்வாகத்தினர் பாஸ்கரன் தங்கிய அறைக்குச் சென்று பார்த்தனர். கதவு உட்புறமாகப் பூட்டப்பட்டிருந்தது.
பின்னர் மாற்றுச்சாவி மூலம் அறையை ஊழியர்கள் திறந்து பார்த்தபோது வாயில் நுரை தள்ளிய நிலையில் கணவன், மனைவி இருவரும் உயிரிழந்து கிடந்தனர். தகவலின் பேரில் மதுரை கோ.புதூர் போலீஸார் இருவரது உடல்களையும் மீட்டு மதுரை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி விசாரித்தனர். அவர்கள் விஷம் குடித்து தற்கொலை செய்துகொண்டது தெரிய வந்தது.
அறையை போலீஸார் சோதனை செய்தபோது, அவர்கள் எழுதிய கடிதம் ஒன்று சிக்கியது. அதில், ‘கடன் தொல்லை இருந்தது, உடல்நிலை, மனநிலை சரியில்லாததால் இம்முடிவை எடுத்தோம். நாங்கள் அணிந்திருக்கும் நகைகளை மகன் கோகுலிடம் (கவிதாமணி மகன்) கொடுக்க வேண்டும். கடன் கொடுத்தவர்கள் மகனை தொல்லை செய்யக் கூடாது’ என அதில் குறிப்பிடப்பட்டிருந்ததாக போலீஸார் கூறினர்.