

சேலம் அருகே குடும்பத் தகராறில் மருமகள், பேரனை துப்பாக்கியால் சுட்ட மாமனாரை போலீஸார் தேடி வருகின்றனர்.
சேலம் மாவட்டம் வாழப்பாடி தேக்கல்பட்டி ஏரிக்கரையைச் சேர்ந்த விவசாயி குப்புசாமி (52). இவரது மனைவி லட்சுமி. இவர்களது மகன்கள் மாதேஷ் (29), சுரேஷ் (27). மகள் பரமேஸ் (24). இவர்கள் அனைவருக்கும் திருமணமாகிவிட்டது. தேக்கல்பட்டி அருகே மந்தகாடு பகுதியில் சுரேஷ் அவரது மனைவி அனிதா (25), ஒன்றரை வயது ஆண் குழந்தை சர்வபுத்திரனுடன் வசித்து வருகிறார்.
இந்நிலையில், நேற்று மது போதையில் இருந்த குப்புசாமி மனைவி லட்சுமியுடன் தகராறு செய்து கட்டையால் தாக்கியுள்ளார். இதைப்பார்த்த அனிதா மாமியாருக்கு ஆதரவாக மாமனாரிடம் தகராறு செய்துள்ளார். இதில், ஆத்திரமடைந்த குப்புசாமி, அனுமதியின்றி வைத்திருந்த நாட்டுத் துப்பாக்கியால் அனிதாவை நோக்கி சுட்டுள்ளார். இதில் அனிதாவுக்கும், அவர் கையில் வைத்திருந்த ஒன்றரை வயது குழந்தை மீதும் குண்டு பாய்ந்தது. இதில் இருவரும் காயமடைந்தனர்.
அக்கம், பக்கத்தினர் அவர்களை மீட்டு அனிதாவை வாழப்பாடியில் உள்ள தனியார் மருத்துவமனையிலும், குழந்தையை சேலம் அரசு மருத்துவமனையிலும் சிகிச்சைக்கு சேர்த்தனர். குப்புசாமி தாக்கியதில் காயமடைந்த லட்சுமி வாழப்பாடியில் தனியார் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். இது குறித்து தகவல் அறிந்து வந்த வாழப்பாடி போலீஸார் வழக்குப் பதிவு செய்து தலைமறைவான குப்புசாமியை தேடி வருகின்றனர்.