

மாணவியுடன் நெருக்கமாக இருந்த வீடியோவை வைத்து மிரட்டியதாக, அண்ணாமலைப் பல்கலைக்கழக உதவிப் பேராசிரியர் மீது ஆராய்ச்சி மாணவி புகார் தெரிவித்தார். இது தொடர்பாக போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
நாமக்கல் மாவட்டத்தை சேர்ந்த 27 வயது மாணவி ஒருவர், சிதம்பரம் அண்ணாமலை பல்கலைக்கழக வேளாண் கல்லூரியில் 2018-ல் ஆராய்ச்சிப் படிப்பு படித்து வந்தார். அந்த மாணவி நேற்று முன்தினம் அண்ணாமலை நகர் காவல் நிலையத்துக்கு ஆன்லைன் மூலம் புகார் மனு அனுப்பி வைத்துள்ளார்.
அதில், “நான் சிதம்பரம் வைப்புச்சாவடியில் உள்ள அடுக்குமாடிக் குடியிருப்பில் தங்கியிருந்து, அண்ணாமலைப் பல்கலைக்கழக வேளாண் கல்லூரியில் பிஹெச்.டி. படித்து வந்தேன். அப்போது, பல்கலைக்கழகத்தில் வேளாண் கல்லூரி நோயியல் பிரிவு உதவிப் பேராசிரியராக பணியாற்றி வந்த ராஜா என்னுடன் பலமுறை நெருக்கமாக இருந்துள்ளார். அதை அவர் வீடியோவாக எடுத்து வைத்துள்ளார். தற்போது அந்த வீடியோவை வைத்து என்னை மிரட்டி வருகிறார். எனவே, அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்” என்று கூறப்பட்டிருந்தது.
இதையடுத்து, கடலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் எஸ்.ஜெயக்குமார் உத்தரவின் பேரில், சிதம்பரம் அண்ணாமலை நகர் காவல் ஆய்வாளர் (பொறுப்பு) தமிழரசி மற்றும் போலீஸார் நேற்று முன்தினம் இரவு உதவிப் பேராசிரியர் ராஜாவை காவல் நிலையத்துக்கு அழைத்து வந்து, விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும், அவரது செல்போனையும் போலீஸார் ஆய்வு செய்து வருகின்றனர். புகார் அளித்த மாணவியையும் நேரில் வருமாறு போலீஸார் கூறியுள்ளனர். தொடர்ந்து விசாரணை நடைபெற்று வருகிறது.