மதுரையில் போலி ஆவணங்கள் மூலம் நில மோசடி: 12 பேர் மீது வழக்கு

மதுரையில் போலி ஆவணங்கள் மூலம் நில மோசடி: 12 பேர் மீது வழக்கு

Published on

மதுரை: சகோதரர்களின் இடத்தை போலி ஆவணங்கள் மூலம் மனை பிரிவு ஒப்புதல் பெற்று மோசடியில் ஈடுபட்டதாக சகோதரிகள் உட்பட 12 பேர் மீது நீதிமன்ற உத்தரவின்பேரில் வழக்கு பதியப்பட்டது.

மதுரை அண்ணாநகரைச் சேர்ந்த கேஜி. பாலசுப்பிரமணியன் என்பவரது குடும்பத்திற்கு சொந்தமான ஒரு ஏக்கர் 50 சென்ட் நிலம் மதுரை வளர்நகர் பகுதியிலுள்ள இலந்தைக்குளத்தில் இருந்தது. இதில் சுமார் 75 சென்ட இடத்தை பாலசுப்பிரமணியனின் தாயார் ஜெயந்திக்கு 1969-ல் தான செட்டில்மெண்ட் பத்திரம் மூலம் எழுதி கொடுக்கப்பட்டது. ஜெயந்தி இறந்த பிறகு பல லட்சம் மதிப்புள்ள அந்த இடத்தை பாலசுப்பிரமணியன், அவரது தம்பி வெங்கடேஷ், சகோதரி உஷாராணி ஆகியோருக்கு பாகப்பிரிவினை செய்தனர்.

இந்நிலையில் 2019-ல் அந்த இடத்தை அளக்க முயன்றபோது, அந்த இடத்தில் மதுரை மாநகராட்சி பூங்கா என்ற பெயர் பலகை வைக்கப்பட்டு இருந்தது தெரிந்தது. இது குறித்து மாநகராட்சி நிர்வாகத்திடம் விசாரித்தபோது, இறந்தவர்களின் பெயர்களை பயன்படுத்தி போலி ஆவணங்கள் மூலம் மனைப் பிரிவு ஒப்புதல் பெற்று மோசடியில் ஈடுபட்டிருப்பது தெரியவந்தது. இது தொடர்பாக மாநகராட்சி, உள்ளூர் திட்டக் குழுமத்தில் புகார் அளித்தும் நடவடிக்கை எடுக்காத நிலையில், பாலசுப்பிரமணியன் தரப்பினர் உயர் நீதிமன்ற மதுரைக் கிளையை அணுகினர்.

இது தொடர்பாக விசாரித்து நடவடிக்கை எடுக்க மாநகர காவல் ஆணையருக்கு உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது. இந்நிலையில் மத்திய குற்றப்பிரிவு போலீஸாரின் விசாரணையில், போலி ஆவணங்கள் தயாரித்து மோசடி செய்திருப்பது தெரிந்தது. இது தொடர்பாக ஜெயந்தியின் மூத்த சகோதரி மகள்கள் ராணிமாய், ரூபி மற்றும் இவர்களுக்கு உடந்தையாக இருந்த உறவினர்களான லட்சுமணன், பாலக்குமார், சபரிபாபு, நாச்சியப்பன், திலீப் குமார், நாராயணன், சுரேஷ், அரவிந்தன், அஸ்வந்த், ஜெய்தீப் ஆகிய 12 பேர் மீது குற்றப்பிரிவு சிறப்பு எஸ்ஐ முருகானந்தம் வழக்கு பதிவு செய்தார்.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in