

கோவை: கோவையில் கிரிக்கெட் சூதாட்டத்தில் ஈடுபட்ட இளைஞரை போலீஸார் கைது செய்து, பணம், சொகுசு கார் உள்ளிட்டவற்றை பறிமுதல் செய்தனர்.
ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டிகளை வைத்து சூதாட்டத்தில் ஈடுபடும் கும்பலைப் பிடிக்க மாநகர காவல் ஆணையரின் தனிப்படை போலீஸார் கண்காணிப்பில் ஈடுபட்டுள்ளனர். கடந்த ஏப்ரல் மாதம் ஐபிஎல் கிரிக்கெட் சூதாட்டத்தில் ஈடுபட்ட 9 பேரை தனிப்படை போலீஸார் பிடித்தனர். இந்நிலையில், சொக்கம்புதூர் அருகே, ஒருவர் ஐபிஎல் கிரிக்கெட் சூதாட்டத்தில் ஈடுபடுவதை தனிப்படை போலீஸார் கண்டறிந்து இன்று அவரைப் பிடித்தனர்.
விசாரணையில் அவர் சொக்கம்புதூர் அன்னை இந்திரா நகரைச் சேர்ந்த ராஜாகணேஷ் (30) என்பதும், செல்வபுரம் கல்லாமேடு பகுதியைச் சேர்ந்த அர்ஜூனன் (35) என்பவரிடம், கிரிக்கெட் சூதாட்டத்தில் ஈடுபட்டால் லட்சம் லட்சமாக பணம் சம்பாதிக்கலாம் என ஆசை காட்டி, அதில் ஈடுபட பிரத்யேக ரகசிய குறியீட்டு எண், கடவுச்சொல் தருவதாக கூறி, ரூ.4.25 லட்சம் வசூலித்து மோசடியில் ஈடுபட்டதும் தெரிய வந்தது. இதுபற்றி அர்ஜுனன் ஏற்கெனவே செல்வபுரம் போலீஸில் புகார் அளித்துள்ளார். இதையடுத்து ராஜாகணேஷ் செல்வபுரம் போலீஸில் ஒப்படைக்கப்பட்டு கைது செய்யப்பட்டார்.
போலீஸார் கூறும்போது, “ராஜாகணேஷ் ‘லோட்டஸ்247.காம்’,‘லீப்புக்247.காம்’ என்ற இணையதள பக்கங்கள் வழியாக கிரிக்கெட் சூதாட்டத்தில் ஈடுபட்டுள்ளார். பணம் கட்டி இணையும் உறுப்பினர்களுக்கு, புள்ளிகளை அளிப்பார். அதைப்பயன்படுத்தி அவர்கள் பிடித்த அணியை தேர்வு செய்து விளையாடுவர்.
சூதாட்டத்தில் ஐ.பி.எல் கிரிக்கெட்டில் எந்த அணி வெற்றி பெறும், எந்த அணியின் வீரர் அதிக ரன்களை குவிப்பார், யார் அதிக விக்கெட்டுகளை வீழ்த்துவார், எந்த பந்தில் பவுண்டரி விளாசுவார் என்பன உள்பட பல்வேறு வகையில் சூதாட்டம் நடத்தப்பட்டுள்ளது. இதில் கிடைத்த பணத்தை வங்கியில் டெபாசிட் செய்ததுடன், வேடப்பட்டியில் 6 சென்ட் இடம் வாங்கியுள்ளார்.
கைதான ராஜாகணேஷிடம் இருந்து ரூ.2.35 லட்சம் ரொக்கம், சொகுசு கார், செல்போன்கள், லேப்டாப் ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. அவரது வங்கிக் கணக்கில் உள்ள ரூ.46 லட்சம், ரூ.50 லட்சம் மதிப்பிலான இடம் ஆகியவற்றை பறிமுதல் செய்து வழக்கில் இணைக்கவும் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. இவ்வழக்கில் தொடர்புடைய சவுந்தர்ராஜன் என்பவர் சிறையில் உள்ளார். அவரும் இவ்வழக்கில் சேர்க்கப்படுவார்” என்றனர்.