கும்பகோணம் அருகே சாலையில் தனியாக நடந்து சென்ற பெண்ணை கூட்டு பாலியல் வன்கொடுமை செய்த 4 பேர் கைது

கும்பகோணம் அருகே சாலையில் தனியாக நடந்து சென்ற பெண்ணை கூட்டு பாலியல் வன்கொடுமை செய்த 4 பேர் கைது
Updated on
1 min read

தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணம் அருகே சாலையில் தனியார் நடந்து சென்ற பெண்ணை கூட்டு பாலியல் வன்கொடுமை செய்த வழக்கில் 4 பேர் கைது செய்யப்பட்டனர்.

திருவாரூர் மாவட்டம் குடவாசல் மேட்டுத் தெருவைச் சேர்ந்த சண்முகபிரபு(29), கும்பகோணம் பேட்டை வடக்கு தெருவைச் சேர்ந்த பாஸ்கர்(40), பாபநாசத்தைச் சேர்ந்த பிரகதீஸ்வரன்(40) ஆகியோர் கும்பகோணம் புறநகர் பகுதியில் உள்ள சிமென்ட் கடையில் பணிபுரிந்து வருகின்றனர்.

இவர்கள் கடந்த 12-ம் தேதி ஆள் நடமாட்டம் குறைவாக உள்ள பகுதியில், சாலையில் தனியாக நடந்துசென்ற 34 வயது பெண்ணை, புதிதாக கட்டப்பட்டு வரும் ஒரு கட்டிடத்துக்குள் கடத்திச் சென்றுள்ளனர். பின்னர், அந்த 3 பேருடன், அங்கு வாட்ச்மேனாகப் பணியாற்றிய சீனிவாசநல்லூரைச் சேர்ந்த சரவணன்(48) என்பவரும் சேர்ந்து, அந்தப் பெண்ணை கூட்டு பாலியல் வன்கொடுமை செய்து, அதை வீடியோ எடுத்ததாகக் கூறப்படுகிறது. பின்னர், அந்தப் பெண்ணிடம் இதுகுறித்து வெளியே சொல்லக்கூடாது என்று மிரட்டி அனுப்பிவைத்துள்ளனர்.

அந்தப் பெண் மறுநாள் (மே 13) தனது சகோதரர்களின் உதவியுடன் ஆடுதுறை அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அதன்பேரில், போலீஸார் வழக்குப் பதிவு செய்து, சண்முகபிரபு, பாஸ்கர், பிரகதீஸ்வரன், சரவணன் ஆகிய 4 பேரையும் கைது செய்து, திருவிடைமருதூர் கிளை சிறையில் அடைத்தனர்.

அன்றைய தினம் பொள்ளாச்சி பாலியல் வழக்கில் அளிக்கப்பட்ட தீர்ப்பு தமிழகம் முழுவதும் பரபரப்பை ஏற்படுத்தியிருந்ததால், இந்த கூட்டு பாலியல் வன்கொடுமை சம்பவம் குறித்து வெளியில் யாரிடம் சொல்லக் கூடாது என பாதிக்கப்பட்ட பெண் தரப்பினரை காவல் துறை அதிகாரிகள் எச்சரித்ததாகக் கூறப்படுகிறது. ஆனாலும், தற்போது இந்த தகவல் வெளியே கசிந்துவிட்ட நிலையில், தகவலை கசியவிட்டது யார் என்று போலீஸார் விசாரித்து வருகின்றனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in