பரமத்தி வேலூர் அருகே குடும்ப தகராறில் மனைவியை கொன்று நாடகமாடிய இந்து முன்னணி நிர்வாகி கைது

பரமத்தி வேலூர் அருகே குடும்ப தகராறில் மனைவியை கொன்று நாடகமாடிய இந்து முன்னணி நிர்வாகி கைது
Updated on
1 min read

நாமக்கல்: நாமக்கல் மாவட்டம் பரமத்தி வேலூர் அருகேயுள்ள பொத்தனூரைச் சேர்ந்தவர் ஜெகதீசன் (40). இந்து முன்னணி மாவட்டச் செயலாளராக உள்ளார். இவரது மனைவி கீதா (36). இவர்களுக்கு 2 மகள்கள் உள்ளனர். இந்நிலையில், நேற்று முன்தினம் இரவு இவர்களது வீட்டில் இருந்து அலறல் சப்தம் கேட்டுள்ளது.

அக்கம் பக்கத்தினர் அங்கு சென்று பார்த்தபோது ஜெகதீசன், கீதா ஆகியோர் வெட்டுக்காயங்களுடன் கிடந்தனர். அவர்களை மீட்டு, நாமக்கல் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி கீதா உயிரிழந்தார்.

இதுகுறித்து எஸ்.பி. ராஜேஷ் கண்ணன் தலைமையிலான போலீஸார், ஜெகதீசனிடம் விசாரணை நடத்தினர். விசாரணையில், தனது மனைவியை அடையாளம் தெரியாத மர்ம நபர்கள் வெட்டிக் கொலை செய்ததாகவும், தடுக்க முயன்ற தனக்கும் வெட்டுவிழுந்ததாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

இதனிடையே, மனைவியைக் கொலை செய்துவிட்டு ஜெகதீசன் நாடகமாடுவதாக போலீஸாருக்கு சந்தேகம் ஏற்பட்டது. இதையடுத்து, ஜெகதீசனிடம் தொடர்ந்து நடத்திய விசாரணையில், குடும்பத் தகராறில் மனைவியின் கழுத்தை அறுத்துக் கொலை செய்துவிட்டு, தனது கையை வெட்டிக் கொண்டதாக ஜெகதீசன் ஒப்புக் கொண்டார். இதையடுத்து, அவரை போலீஸார் கைது செய்தனர்.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in