சித்திரைத் திருவிழா: மதுரையில் மாறுவேடத்தில் போலீஸார் ரோந்து!

கோப்புப்படம்
கோப்புப்படம்
Updated on
1 min read

மதுரை: சித்திரை திருவிழாவையொட்டி, மதுரையில் போலீஸார் மாறுவேடத்தில் ரோந்து பணியில் ஈடுபட்டுள்ளனர். மதுரையில் சித்திரை திருவிழா இன்று (ஏப்.29) கொடியேற்றத்துடன் தொடங்கியது. இதையொட்டி, பாதுகாப்பு குறித்து மாவட்டம் நிர்வாகம் மற்றும் மாநகர், மாவட்ட காவல் துறை அதிகாரிகள் ஆலோசனை நடத்தி, முன்னேற்பாடுகளை மேற்கொள்கின்றனர். இத்திருவிழாவில் குற்றச் செயல்களை தடுக்க, காவல்துறையினர் பல்வேறு வியூகங்களை வகுத்து, அதற்கான திட்டங்களை அமல்படுத்த உள்ளனர்.

இதன் ஒருபகுதியாக, மாநகர் முழுவதும் பகுதி வாரியாக சாதாரண உடை அணிந்து போலீஸார் மாறுவேடத்தில் ரோந்து பணியில் ஈடுபட காவல் ஆணையர் லோகநாதன் உத்தரவிட்டுள்ளார். மாநகர நுண்ணறிவு பிரிவு, உள்ளூர் போலீஸார் இணைந்து 2 அல்லது 3 பேர் மட்டும் இப்பணிகளில் ஈடுபட்டுள்ளனர். இவர்கள் தலைப்பாகை, கைலி, அழுக்கு சட்டை அணிந்து சிக்னல், உள்ளிட்ட பகுதிகளில் ரோந்து செல்கின்றனர்.

போலீஸாரே சந்தேகப்பட்டு இவர்களைப் பிடித்து விசாரிக்கும் வகையில் மாறுவேட போலீஸார் சுற்றி வருகின்றனர். இதன்மூலம் சிக்னல் உள்ளிட்ட பிற இடங்களில் பணியில் இருக்கும் போலீஸார் கவனமாக இருக்கிறார்களா என்பதை ஆய்வு செய்யவும், சந்தேகத்துக்குரிய நபர்களை கண்டறிந்து காவல் நிலையத்தில் ஒப்படைக்கும் விதமாக இந்த புதிய மாறுவேட ரோந்து பணி அமலாகி இருக்கிறது.

இதுகுறித்து மாறுவேட போலீஸார் கூறுகையில், “சித்திரைத் திருவிழா நெருங்கும் வேளையில் கூட்ட நெரிசலை பயன்படுத்தி வழிப்பறி, திருட்டு போன்ற குற்றச் செயல்களை தடுக்க முன்கூட்டியே போலீஸாரை உஷார்படுத்தும் நோக்கில் சிறப்பு ரோந்து பணியில் ஈடுபட்டிருக்கிறோம். மேலும், ஒவ்வொரு காவல் நிலைய எல்லையிலும், பணியிலுள்ள போலீஸார் , கவனமாகவும் பொறுப்பாகவும் இருக்கிறார்களா என்பதை அறியவும் மாறுவேடத்தில் செல்கிறோம்.

டீக்கடை, ஓட்டல், பேருந்து நிலையம், ரயில் நிலையங்களில் ரோந்து செல்லும்போது, அப்பகுதியில் சந்தேகிக்கும் நபர்களை கண்காணித்து பிடித்து, அவர்களை காவல் நிலையங்களில் ஒப்படைக்கும் பணியிலும் நாங்கள் ஈடுபடுவோம். ஒவ்வொரு நாளும் எங்களை சந்தேகித்தின்பேரில் விசாரித்த போலீஸார் , அவர்களுடைய பணி குறித்த தகவல்களை சேகரித்து அதிகாரிகளுக்கு தகவல் கூறுவோம். நகரில் குற்றச் செயல்களை தடுக்க இது உதவும் என்று நம்புகிறோம்,” என்று அவர்கள் கூறினர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in