மதுரை திமுக பிரமுகர் உறவினர் கொலையில் தொடர்புடைய நபரை கைது செய்ய தவறிய ஆய்வாளர் சஸ்பெண்ட்!

மதுரை திமுக பிரமுகர் உறவினர் கொலையில் தொடர்புடைய நபரை கைது செய்ய தவறிய ஆய்வாளர் சஸ்பெண்ட்!
Updated on
1 min read

மதுரை: திமுக பிரமுகர் உறவினர் கொலையில் தொடர்புடைய நபருக்கு வாரன்ட் பிறபித்தபோது, அவரை கைது செய்ய தவறிய மதுரை கூடல்புதூர் காவல் ஆய்வாளர் பாலமுருகனை பணியிடை நீக்கம் செய்து காவல் ஆணையர் லோகநாதன் உத்தரவிட்டார்.

மதுரை தனக்கன்குளம் அருகே மொட்டமலை பகுதியில் கடந்த 22-ம் தேதி முன்னாள் திமுக மண்டலத் தலைவர் வீ.கே.குருசாமி சகோதரி மகன் கிளாமர் காளி என்ற காளீஸ்வரன் (27) என்பவர் 3 பேர் கொண்ட கும்பலால் படுகொலை செய்யப்பட்டார். இது தொடர்பாக ஆஸ்டின்பட்டி போலீஸார் வழக்குப் பதிவு செய்து கொலையாளிகளை தேடினர். இந்நிலையில், காளீஸ்வரன் கொலையில் தொடர்புடைய மதுரை சுள்ளான் பாண்டியை போலீஸார் தேடிய நிலையில், அவர் மதுரை மாவட்ட நீதிமன்றத்தில் சரண் அடைந்தார். அவர் சிறையில் அடைக்கப்பட்டார்.

பல்வேறு குற்ற வழக்கில் தொடர்புடைய இவர், 3 ஆண்டாக தொடர்ந்து தலைமறைவாக இருந்தார். சுள்ளான் பாண்டிக்கு நீதிமன்றம் பிடிவாரன்ட் பிறபித்தது. ஆனால் அவரை கைது செய்யாமல் பணியில் அலட்சியமாக இருந்ததாக மதுரை கூடல்புதூர் காவல் நிலைய ஆய்வாளர் பாலமுருகன் மீது குற்றச்சாட்டு எழுந்தது. இதைத் தொடர்ந்து அவரை பணியிடை நீக்கம் (சஸ்பெண்ட்) செய்து, மதுரை மாநகர காவல் ஆணையர் ஜெ.லோகநாதன் இன்று உத்தரவிட்டார்.

ஒவ்வொரு மாதமும் சட்டம் - ஒழுங்கு தொடர்பான கூட்டத்தில் குற்றவாளிகள் கைது விவரம் குறித்த அறிக்கையிலும் தகவல் கொடுக்காமல் இருந்ததாகவும் அவர் மீது புகார் எழுந்ததாலும் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டது என காவல் துறையினர் தெரிவிக்கின்றனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in