

மதுரை: ரூ.80 ஆயிரம் பணத்துகாக சிவகங்கை தனிப்படை காவலரை அடித்துக் கொன்று தீயிட்டு எரித்த ஆட்டோ ஓட்டுநரை போலீஸார் துப்பாக்கியால் சுட்டுப் பிடித்து கைது செய்தனர்.
விபத்தில் இறந்த மனைவி: விருதுநகர் மாவட்டம், முக்குளம் அருகிலுள்ள அழகாபுரி கிராமத்தைச் சேர்ந்தவர் மலையரசன் (35). இவர், சிவகங்கை காளையார்கோவிலில் தனிப்படை காவலராக பணிபுரிந்தார். இவரது மனைவி பாண்டிச்செல்வி (33) இவர்களுக்கு இரு மகன்கள் உள்ளனர். கடந்த சில நாட்களுக்கு முன்பு திருச்சுழி பகுதியில் நடந்த உறவினர் வீட்டு நிகழ்ச்சிக்கு சென்றுவிட்டு டூவீலரில் மனைவியுடன் மலையரசன் திரும்பியபோது, மானாமதுரை அருகே வாகன விபத்தில் சிக்கி அவரது மனைவி உயிரிந்தார்.
எரித்துக் கொலை: இதன்பின், விடுமுறையில் இருந்த மலையரசன் மார்ச் 18-ம் தேதி மதுரை ரிங்ரோடு ஈச்சனோடை பகுதியில் எரிந்த நிலையில் கொலை செய்யப்பட்டு கிடந்தார். மனைவி இறந்த வேதனையில் அவர் தீக்குளித்து தற்கொலை செய்தாரா அல்லது யாராவது எரித்துக் கொன்றனரா என்ற கோணத்தில் பெருங்குடி போலீஸார் விசாரித்து வந்தனர். இந்நிலையில், மலையரசன் எரித்துக் கொலை செய்யப்பட்டது உறுதியானது. தனிப்படை போலீஸார் கொலையாளிகளை தீவிரமாக தேடி வந்தனர்.
போலீஸ் விசாரணை... - மலையரசனின் செல்போன் அழைப்புகளை ஆய்வு செய்தபோது, மதுரை வில்லாபுரம் ஆட்டோ ஓட்டுநர் மூவேந்திரனிடம் (35) மலையரசன் அடிக்கடி பேசியிருப்பதும், இந்த கொலையில் அவருக்கு தொடர்பு இருப்பதும் போலீஸாருக்கு தெரியவந்தது. இதையடுத்து போலீஸார் அவரை தேடினர். நேற்று (மார்ச் 23) இரவு விமான நிலையம் அருகே பைபாஸ் சாலையில் மூவேந்திரன் இருப்பதாக தனிப்படை போலீஸாருக்கு தகவல் கிடைத்தது.
துப்பாக்கிச்சூடு... - இதையடுத்து அங்குசென்ற போலீஸார் அவரைப் பிடிக்க முயன்றபோது, சாலையோர புதருக்குள் மறைத்து வைத்திருந்த ஆயுதத்தால் போலீஸாரை தாக்கிவிட்டு மூவேந்திரன் தப்பிக்க முயன்றார். இதனால், போலீஸார் அவரை துப்பாக்கியால் முழங்கால் அருகே சுட்டுப் பிடித்தனர். மூவேந்திரன் தாக்கியதில் எஸ்.ஐ மாரிகண்ணன் காயமடைந்தார். இருவரும் மதுரை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டனர். இந்த கொலைக்கு உடந்தையாக இருந்த மூவேந்திரனின் நண்பர் சிவாவும் (30) கைது செய்யப்பட்டார்.
வெளியான திடுக்கிடும் தகவல்: இதுகுறித்து போலீஸார் கூறியது: “காவலர் மலையரசனின் மனைவி சில தினத்துக்கு முன்பு விபத்தில் சிக்கினார். மதுரை சிந்தாமணி டோல்கேட் அருகிலுள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். மனைவியை பார்க்க, அடிக்கடி மலையரசன் மதுரைக்கு வந்தபோது, மூவேந்திரன் ஆட்டோவை பயன்படுத்தி இருக்கிறார். இதன்மூலம் இருவருக்கும் இடையே பழக்கம் ஏற்பட்டிருக்கிறது.
அவ்வப்போது அவசர தேவைகளுக்காகவும், டீசல் செலவு, மது அருந்தவென்று ரூ. 500, 1000 என மூவேந்திரன், மலையரசனிடம் ஜிபே மூலம் பணம் வாங்கியுள்ளார். இந்நிலையில் கடந்த 18-ம் தேதி மதுரைக்கு டூவீலரில் வந்த மலையரசனை மூவேந்திரன் சந்தித்துள்ளார். ஏற்கெனவே மனைவி இறந்த துக்கத்தை மறக்க, மது அருந்தலாம் என மூவேந்திரன் கூறிய நிலையில் டூவீலரை மாட்டுத்தாவணி பகுதியில் ஓரிடத்தில் நிறுத்திவிட்டு மூவேந்திரன் ஆட்டோவில் மலையரசன் மற்றும் மூவேந்திரன் நண்பர் சிவா ஆகியோர் சென்றுள்ளனர்.
ஆதாரங்கள் கிடைத்தது எப்படி? - விமான நிலையம் அருகே செம்பூரணி வல்லவேந்தல்புரம் பகுதியில் சாலையோர பகுதியில் அமர்ந்து மது குடித்துள்ளனர். போதையில் இருந்த மலையரசனிடம் அக்கவுண்டில் ரூ.80 ஆயிரம் இருப்பதை அவரது செல்போன் மூலம் தெரிந்து கொண்ட மூவேந்திரன், மலையரசன் செல்போனை எடுத்துள்ளார். இதை கண்டித்த மலையரசன் தலையில் மூவேந்திரன் கம்பியால் தாக்கியுள்ளார். இந்த தாக்குதலில் உயிரிழந்த மலையரசன் மீது பெட்ரோல் ஊற்றி எரித்துள்ளனர்.
பாதி எரிந்த நிலையில் ஈச்சனேரி பகுதியில் உடலை வீசிவிட்டு இருவரும் தப்பிச் சென்றுள்ளனர். ஏற்கெனவே ஜிபே ரகசிய எண்ணை தெரிந்து கொண்ட மூவேந்திரன், மலையரசன் செல்போனில் ஜிபோ மூலம் ரூ.80 ஆயிரத்தை தனக்கு தெரிந்த நபருக்கு தலா ரூ.40 ஆயிரம் வீதம் இரு முறை அனுப்பி பிறகு அவரது ஜிபே எண்ணுக்கு அந்த நபரை அனுப்ப வைத்தும் விசாரணையில் தெரிய வந்துள்ளது.
இவ்வழக்கில் மலையரசன், மூவேந்திரன் செல்போன் அழைப்புகள் மற்றும் பணம் பரிவர்த்தனை விவரங்கள், சிசிடிவி காட்சிகளை வைத்தே கொலையாளிகளை கைது செய்தோம்” என்று கூறினர். இவ்வழக்கில் தொழில்நுட்ப ரீதியில் சிறப்பாக பணியாற்றி கொலையாளிகளை பிடித்த காவல் ஆய்வாளர் சரவணன் உள்ளிட்ட தனிப்படையினருக்கு மதுரை எஸ்.பி. அரவிந்த் பாராட்டு தெரிவித்துள்ளார்.