

மதுரை: மதுரையில் திமுக பிரமுகர் விகே குருசாமியின் சகோதரி மகன் காளீஸ்வரன் நேற்று முன்தினம் வெட்டிக் கொல்லப்பட்ட நிலையில், இதன் பின்னணியில் இருக்கும் பழிவாங்கும் படலத்தின் முழு விவரம் என்ன?
மதுரை காமராஜர்புரம் பகுதியைச் சேர்ந்தவர்கள் வீகே குருசாமி, ராஜபாண்டி. திமுக, அதிமுகவை சேர்ந்த இருவரும் ஒரே சமூகத்தை சேர்ந்தவர்கள். இவர்கள் மதுரை மண்டல தலைவர்களாகவும் இருந்துள்ளனர். இருவருக்கும் இடையே உள்ளாட்சி தேர்தலில் முன்விரோதம் ஏற்பட்டது. ராஜாபாண்டிக்கு உதவியாளராக இருந்த அவரது அண்ணன் மகன் சின்ன முனீஸ் என்பவர் 2003-ல் கொல்லப்பட்டார். இது தொடர்பாக வீகே குருசாமி மற்றும் அவரது தரப்பைச் சேர்ந்த பாம்பு பாண்டி, மாரிமுத்து உள்ளிட்ட 7 பேர் கைது செய்யப்பட்டனர். தொடர்ந்து இருதரப்பிலும் மோதல் அதிகரித்தது. 2008-ல் சின்ன முனிஸ் கொலைக்கு பழிக்கு பழியாக வழுக்கை முனிஸை - ராஜாபாண்டி தரப்பு கொலை செய்தது.
இதன்பின், சின்ன முனிஸ் தம்பி வெள்ளைக்காளி, குருசாமி உறவினர்கள் மாரிமுத்து, ராமமூர்த்தி ஆகியோரை கொன்றார். சின்ன முனீஸ் கொலை வழக்கில் தொடர்படைய குருசாமியின் தங்கை கணவர் பாம்பு பாண்டியை வெள்ளக்காளி, அவரது நண்பர்கள் சகுனி கார்த்தி, முத்து இருளாண்டி ஆகியோர் 2013-ல் வெங்காய மார்க்கெட்டில் கொலை செய்தனர். இதில் ஆத்திரமடைந்த குருசாமி தரப்பு, சகுனி கார்த்தி தாய் மாமா மயில் முருகன் 2013-ல் மதுரை நடனா தியேட்டர் அருகே கொல்லப்பட்டார். மயில்முருகன் கொலைக்கு பதிலாக 2015-ல் குருசாமி மகன் மணி நண்பர் முனியசாமி கொல்லப்பட்டார்.
தொடர்ச்சியாக 2016ல் வெள்ளக்காளி தரப்பினர் கமுதி பகுதியில் விகே குருசாமியின் மகளின் கணவர் வழக்கறிஞர் எம்எஸ் பாண்டியன் தம்பி காட்டு ராஜா என்பவரை பேருந்தில் வைத்து கொன்றனர். தொடர்ந்து 2017-ல் தொப்பிலி முனுசாமியை கமுதிக்கு காரில் கடத்திய குருசாமி தரப்பு பெட்ரோல் ஊற்றி எரித்துக் கொன்றனர். இதற்கிடையில் மதுரை சிக்கந்தர் சாவடி பகுதியில் பதுங்கியிருந்தபோது, வெள்ளக்காளி கூட்டாளிகள் சகுனி கார்த்திக், முத்து இருளாண்டி இருவரும் போலீஸாரை தாக்க முயன்றதாக துப்பாக்கியால் சுட்டு கொல்லப்பட்டனர்.
இதற்கு குருசாமியே காரணம் என, வெள்ளக்காளி தரப்பினர் கருதினர். இதையொட்டி 2019ல் தேர்தல் பணியில் இருந்த குருசாமியின் மருமகன் எம்எஸ் பாண்டியை வெள்ளிக்காளி தரப்பு வெட்டிக் கொன்றது. 2020 ஜூலை 28 ல் வெள்ளை காளியின் பிறந்தநாளுக்கு பரிசு என கூறி குருசாமியின் வீட்டில் பெட்ரோல் வெடிகுண்டு வீசி தாக்குதல் நடத்தினர்.
இவ்வாறு இருதரப்பிலும் பழிக்கு பழியாக இதுவரை 20க்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்ட நிலையில், 2023ல் மதுரைக்கு நீதிமன்றத்தில் ஆஜராகிவிட்டு சென்ற விகே குருசாமியை, பெங்களூர் பகுதியில் வைத்து வெள்ளக்காளி தரப்பு தாக்கியது. தற்போது மதுரையிலுள்ள வீட்டில் இருந்தபடி குருசாமி சிகிச்சை பெறுகிறார்.
இந்நிலையில் விகே குருசாமியின் சகோதரி மகன் காளீஸ்வரன் என்ற கிளாமர் கார்த்திக் (32) மதுரை தனக்கன்குளம் மொட்டமலை பகுதியில் நேற்று முன்தினம் நள்ளிரவில் ஒரு கும்பலால் வெட்டிக் கொலை செய்யப்பட்டார். இது பற்றி தகவல் அறிந்த ஆஸ்டின்பட்டி போலீஸார் அவரது உடலை மீட்டு மதுரை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேல அனுப்பானடியைச் சேர்ந்த இவர், கடந்த ஒரு மாதமாக தனக்கன்குளம் பகுதியில் குடும்பத்தினருடன் வசித்துள்ளார். இவர் மீது மதுரை நகரில் பல்வேறு வழக்குகள் நிலுவையில் உள்ளன.
சிறைச்சாலையிலுள்ள வெள்ளைகாளி தரப்பினரே திட்டமிட்டு காளீஸ்வரனை கொலை செய்திருக்கலாம் என போலீஸ் சந்தேகிக்கிறது. இது தொடர்பாக ஆஸ்டின்பட்டி போலீஸார் வழக்கு பதிவு செய்துள்ளனர். 3 தனிப்படை போலீஸார் கொலையாளிகளை தேடுகின்றனர். கொலையுண்ட காளீவரனுக்கு திருமணமாகி மீனாட்சி என்ற மனைவியும் இரு குழந்தைகளும் உள்ளனர். காளீஸ்வரன் கொலையால் மதுரை அரசு மருத்துவமனையில் போலீஸார் குவிக்கப்பட்டனர். விகே குருசாமி, வெள்ளைக்காளி தொடர் கொலை சம்பவம் மீண்டும் நீடிக்க தொடங்கிய நிலையில் கீரைத்துறை, காமராஜர்புரம் பகுதியில் கூடுதல் போலீஸ் பாதுகாப்பு அளிக்கப்பட்டுள்ளது.