

கோவை: கோவையில் பாலியல் வன்கொடுமை, போதை மாத்திரை விற்பனை, குற்ற வழக்குகளில் கைதான நான்கு பேர் குண்டர் தடுப்புச் சட்டத்தில் அடைக்கப்பட்டனர்.
கோவை சுகுணாபுரத்தை அடுத்துள்ள செந்தமிழ் நகரைச் சேர்ந்தவர் பீர் முகமது என்ற பச்சை மிளகாய் பீர்(42). கடந்த சில நாட்களுக்கு முன்னர், குறிச்சி குளக்கரை அருகே, நடந்து சென்றவரை பணம் கேட்டு மிரட்டிய வழக்கில் குனியமுத்தூர் போலீஸார் பீர்முகமதுவை கைது செய்து, விசாரணைக் கைதியாக கோவை மத்திய சிறையில் அடைத்தனர். அதேபோல், கோவை தெற்கு உக்கடம் புல்லுக்காடு ஹவுசிங் யூனிட்டைச் சேர்ந்தவர் காஜா உசேன்(26). கஞ்சா, போதை மாத்திரைகளை விற்பனை செய்த வழக்கில் கடைவீதி போலீஸார், காஜா உசேனை சமீபத்தில் கைது செய்து கோவை மத்திய சிறையில் விசாரணைக் கைதியாக அடைத்தனர்.
கோவை வடவள்ளியைச் சேர்ந்தவர் ராஜன்(57). பள்ளிச் சிறுமிக்கு பாலியல் தொல்லை அளிக்கப்பட்ட வழக்கில், கோவை மத்தியப் பகுதி அனைத்து மகளிர் போலீஸார், ராஜனை சமீபத்தில் கைது செய்து, கோவை மத்திய சிறையில் அடைத்தனர். கோவை சுங்கம் அருகேயுள்ள, நாட்டை காலனியைச் சேர்ந்தவர் சக்திவேல்(22). பொது அமைதிக்கு பாதிப்பு ஏற்படுத்திய இவரை, சமீபத்தில் ராமநாதபுரம் போலீஸார் கைது செய்து கோவை மத்திய சிறையில் அடைத்தனர். மேற்கண்ட பீர் முகமது, காஜா உசேன், ராஜன், சக்திவேல் ஆகியோரை குண்டர் தடுப்புச் சட்டத்தின் கீழ் அடைக்க உத்தரவிடுமாறு, அந்தந்த காவல் நிலைய ஆய்வாளர்கள், மாநகர காவல் ஆணையரிடம் பரிந்துரைத்தனர்.
அதன் பேரில், மாநகர காவல் ஆணையர் சரவண சுந்தர் மேற்கண்ட நால்வரையும் குண்டர் தடுப்புச் சட்டத்தில் அடைக்க நேற்று (மார்ச்.21) உத்தரவிட்டார். தொடர்ந்து பீர் முகமது, காஜா உசேன், ராஜன், சக்திவேல் ஆகிய நால்வரும் நேற்று (மார்ச்.21) கோவை மத்திய சிறையின் குண்டர்கள் தடுப்புப் பிரிவில் அடைக்கப்பட்டனர்.