“பாஜக தோல்வியுறும் மாநிலங்களின் இடங்களைக் குறைக்க விரும்புகிறது” - பஞ்சாப் முதல்வர் குற்றச்சாட்டு

“பாஜக தோல்வியுறும் மாநிலங்களின் இடங்களைக் குறைக்க விரும்புகிறது” - பஞ்சாப் முதல்வர் குற்றச்சாட்டு
Updated on
1 min read

சென்னை: "பாரதிய ஜனதா கட்சி அது தோல்வியைச் சந்திக்கும் என்கிற நிலை உள்ள மாநிலங்களில் எல்லாம் அதன் தொகுதிகளைக் குறைக்க விரும்புகிறது" என்று பஞ்சாப் முதல்வர் பகவந்த் மான் கூறியுள்ளார்.

சென்னையில் முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் நடந்த தொகுதி மறுவரையறை தொடர்பான கூட்டு நடவடிக்கைக் குழுக் கூட்டத்தில் பஞ்சாப் மாநிலத்தின் முதல்வர் பகவந்த் மான் கலந்து கொண்டார். கூட்டத்தில் அவர் பேசும்போது, “தாங்கள் வெற்றி பெரும் மாநிலங்களின் மக்களவை தொகுதிகளின் எண்ணிக்கையை அதிகப்படுத்துவதும், தோல்வியைச் சந்திக்கும் மாநிலங்களில் தொகுதிகளின் எண்ணிக்கையை குறைப்பதே பாகஜவின் நோக்கமாகும்.

அதன்படி பஞ்சாப் மாநிலத்தின் மக்களவைத் தொகுதிகளும் குறைக்கப்படும். ஏனெனில் பாஜக பஞ்சாப்பில் வெற்றி பெறாது. இந்தத் தொகுதி மறுவரையறையால் இந்தி பேசும் மாநிலங்கள் மட்டுமே ஆதாயம் பெறும்” என்று தெரிவித்தார்.

முன்னதாக, கேரள முதல்வர் பேசும் போது, "தற்போதைய தொகுதி மறுவரையறை செயல்பாடு வட இந்தியாவுக்கு நன்மைபயக்கும் என்று அறிந்திருப்பதால், மத்திய அரசு இதனை முன்னெடுக்கப் பார்க்கிறது. ஒருபுறம் மக்கள் தொகையை சிறப்பான முறையில் கட்டுப்படுத்தியதற்காக தென்மாநிலங்களை மத்திய அரசு பாராட்டுகிறது. ஆனால் மறுபுறம் மக்கள் தொகை குறைவாக இருப்பதைக் காரணம் காட்டி நமது பங்கினை குறைக்கிறது" என்று குற்றம்சாட்டியிருந்தார்.

ஒடிசா முன்னாள் முதல்வர் நவீன் பட்னாயக் காணொலி வாயிலாக பேசுகையில், "மக்கள் தொகையைக் கட்டுப்படுத்தவும், நிலைப்படுத்தவும் சிறப்பாகச் செயல்பட்ட மாநிலங்களில் வாழும் மக்களின் ஜனநாயக பிரதிநிதித்துவத்தையும் உரிமைகளையும் உறுதி செய்வதற்கான ஒரு முக்கியமான கூட்டம் இது. மக்கள் தொகை அடிப்படையில் மட்டுமே தொகுதி மறுவரையறை செய்வது நியாயமற்றது." என்று தெரிவித்திருந்தார்.

தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைவர்களை வரவேற்று பேசுகையில், "தொகுதி மறுவரையறையை தமிழகம் எதிர்க்கவில்லை. அதனை நியாயமாக நடத்தவே வலியுறுத்துகிறது. மக்கள் தொகை அடிப்படையிலான தொகுதி மறுவரையறை என்பது தென் மாநிலங்களை கடுமையாக பாதிக்கும். காலம் காலமாக பாதுகாக்கப்படும் நமது சமூக நீதி பாதிக்கப்படும். அதனைத் தடுக்க இந்திய ஜனநாயகத்தை காக்க நாம் இங்கு ஒன்று கூடியுள்ளோம்" என்று கூறியிருந்தார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in