

ஓசூர்: ஓசூரை அடுத்த பாகலூர் அருகே எலுவப்பள்ளி கிராமத்தில் பள்ளியின் அருகே இருந்த நீர் சேமிப்புக் குட்டையில் தவறி விழுந்த பள்ளி மாணவரும், அவரை மீட்க சென்ற தலைமை ஆசிரியரும் உயிரிழந்தனர்.
கிருஷ்ணகிரி மாவட்டம் பாகலூர் அடுத்த எலுவப்பள்ளி கிராமத்தில் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி உள்ளது. இந்த பள்ளியில் 20-க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் படித்து வருகின்றனர். இப்பள்ளியில் கவுரிசங்கர் ராஜீ (53), என்பவர் தலைமை ஆசிரியராகப் பணியாற்றி வந்தார். இந்நிலையில் அப்பள்ளியில் 3-ம் வகுப்பு படித்து வந்த மாணவர் நித்தின் (8), மற்றொரு மாணவருடன் இன்று (மார்ச் 5) மதியம் உணவு இடைவேளையில் பள்ளின் அருகே இருந்த விவசாயத்துக்கான நீர் சேமிப்பு குட்டையின் அருகே விளையாடிக் கொண்டிருந்தார்.
அப்போது எதிர்பாரதவிதமாக குட்டையில் நித்தின் தவறி விழுந்தார். உடனிருந்த மாணவர் இதுகுறித்து தலைமை ஆசிரியர் கவுரிசங்கர் ராஜீவிடம் கூறி உள்ளார். இதனால் பதற்றம் அடைந்த தலைமை ஆசிரியர் , நீரில் தத்தளித்துக் கொண்டிருந்த மாணவரை மீட்பதற்காக, அந்தக் குட்டையில் குதித்தார். எனினும், நீரில் மூழ்கி மாணவன் நித்தின் மற்றும் தலைமை ஆசிரியர் கவுரிசங்கர் ராஜீ ஆகிய இருவரும் உயிரிழந்தனர். இதனையடுத்து, அப்பகுதி பொதுமக்கள் வந்து இருவரையும் சடலமாக மீட்டனர்.
மேலும், சம்பவம் குறித்து தகவலறிந்த பாகலூர் போலீஸார் சம்பவ இடத்துக்கு சென்று இரு உடல்களையும் மீட்டு பிரேத பரிசோதனைக்காக ஓசூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து, விசாரணை செய்து வருகின்றனர். முதல் கட்ட விசாரணையில், தலைமை ஆசிரியர், மாணவர் என இருவருக்கும் நீச்சல் தெரியாமல் இருந்திருக்கலாம் என்று போலீஸார் சந்தேகிக்கின்றனர். குட்டையில் தவறி விழுந்த மாணவரை மீட்க சென்ற தலைமை ஆசிரியர் மற்றும் மாணவர் உயிரிழந்தது அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.