Published : 21 Feb 2025 06:51 PM
Last Updated : 21 Feb 2025 06:51 PM
விழுப்புரம்: விழுப்புரம் அருகே அரசூர் கூட்டுச்சாலையில் ஃபெஞ்சல் புயல் வெள்ளத்தில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு ஆறுதல் கூறச்சென்ற அமைச்சர் பொன்முடி, அப்போதையை ஆட்சியர் பழனி உள்ளிட்டோர் மீது சேற்றை வீசியவர் கைது செய்யப்பட்டுள்ளார். மேலும், தலைமறைவாக உள்ள பாஜக நிர்வாகியை தேடி வருகின்றனர்.
கடந்த நவம்பர் மாதம் 30-ஆம் தேதி ஃபெஞ்சல் புயல் கரையை கடந்த போது வரலாறு காணாத மழை பெய்ததில் விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள ஆயிரக்கணக்கான வீடுகளும், பல்லாயிரக்கணக்கான ஏக்கர் விலை நிலங்களும் வெள்ளத்தில் மூழ்கி ஏராளமான பொதுமக்கள் பெரிதும் பாதிப்புக்குள்ளாகினர். குறிப்பாக அரசூர் அருகே உள்ள இருவேல்பட்டு கிராமத்தில் வெள்ளத்தில் வீடுகள் மூழ்கி 500-க்கும் மேற்பட்ட குடும்பங்கள் பாதிக்கப்பட்டது.
இதையடுத்து, வெள்ளப்பெருக்கால் குடியிருப்புகளையும், உடைமைகளையும் தாங்கள் இழந்துள்ள நிலையில், மின்சாரம், உணவு, குடிநீர் உள்ளிட்டஅத்தியாவசியத் தேவைகளை நிறைவேற்றித் தரவில்லை. அலுவலர்கள் யாரும் பார்க்கவில்லை. நிவாரண உதவிகளைக் கூடசெய்யவில்லை எனக் கூறி, பல்வேறு கிராமங்களைச் சேர்ந்த பொதுமக்கள் சுமார் 500 க்கும் மேற்பட்டோர் இருவேல் பட்டு கிராம மக்கள் திருச்சி - சென்னை தேசிய நெடுஞ்சாலையில் அரசூர் பகுதியில் கடந்த டிசம்பர் மாதம் காலை 8 மணிக்கு சாலை மறியலில் ஈடுபட்டனர்.
இதைத் தொடர்ந்து உளுந்தூர்பேட்டை எம்.எல்.ஏ. ஏ.ஜெ. மணிக்கண்ணன் உள்ளிட்டோர் பேச்சுவார்த்தை நடத்தியும் பலனில்லை. இத்தகவலறிந்த அமைச்சர் பொன்முடி, அப்போதைய ஆட்சியர் சி.பழனி உள்ளிட்டோர் பொதுமக்களிடம் பேச்சு வார்த்தை நடத்த சென்றனர். விழுப்புரத்திலிருந்து அரசூர் நோக்கிச் சென்ற போது, இருவேல்பட்டில் சாலை மறியலில் ஈடுபட்டுக் கொண்டிருந்ததால், காரிலிருந்து இறங்கி பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினார்.
அப்போது அங்கிருந்த இருவர் சேற்றை வாரி வீசியதில் அமைச்சர் பொன்முடி, முன்னாள் எம்பி பொன்.கௌதமசிகாமணி, அப்போதைய ஆட்சியர் பழனி உள்ளிட்டோரின் சட்டைமீது தெறித்தது. இதையடுத்து அங்கு பாதுகாப்புப் பணியில் இருந்த எஸ்.பி.க்கள் தீபக் ஸ்வாட்ச், ஜெயக்குமார் உள்ளிட்டோர் அமைச்சர் பொன்முடியை பாதுகாப்பாக அழைத்துச் சென்று அனுப்பி வைத்தனர்.
இதையடுத்து, அமைச்சர் பொன்முடி உள்ளிட்டோர் மீது சேற்றை வீசியெறிந்ததாக இருவேல்பட்டு கிராமத்தைச் சேர்ந்த ராமகிருஷ்ணன் மற்றும் பாஜக நிர்வாகி விஜயராணி உள்ளிட்ட 2 பேர் மீது திருவெண்ணைநல்லூர் போலீஸார் வழக்குப் பதிவு செய்து கைது செய்யும் நடவடிக்கையில் ஈடுபட்டனர். தலைமறைவான இருவரையும் போலீஸார் தீவிரமாக தேடி வந்த நிலையில், சுமார் 80 நாட்களுக்கு பிறகு ராமகிருஷ்ணனை திருவெண்ணைநல்லூர் போலீஸார் இன்று கைது செய்தனர். மேலும், தலைமறைவாக இருந்து வரும் பாஜக நிர்வாகி விஜயராணியை போலீஸார் தேடி வருகின்றனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT