Published : 21 Feb 2025 06:23 PM
Last Updated : 21 Feb 2025 06:23 PM
கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரி மலையில் பெண்ணை கூட்டு பாலியல் வன்கொடுமை செய்த சம்பவத்தில் 4 பேர் கைது செய்யப்பட்டனர். இதில், கைது நடவடிக்கையின்போது தப்ப முயன்ற ஒருவரை போலீஸார் துப்பாக்கியால் சுட்டுப் பிடித்தனர். மேலும், தப்பி ஓட முயன்றதில் மற்றொருவருக்கு கால் முறிவு ஏற்பட்டது.
கிருஷ்ணகிரி புதிய பேருந்து நிலையத்தின் பின்புறம் மலை உள்ளது. இந்த மலைக்கு கடந்த 19-ம் தேதி பிற்பகல் 3 மணி அளவில் திருப்பத்தூர் பகுதியை சேர்ந்த 35 வயது ஆணும், 30 வயது மதிக்கத்தக்க பெண்ணும் சென்றனர். அவர்கள் மலையின் உச்சிக்கு சென்றபோது அங்கு 4 இளைஞர்கள், மது போதையில் அமர்ந்திருந்தனர். மலை உச்சிக்கு தனியாக வந்த இருவரையும் கத்தி முனையில் மிரட்டிய போதைக் கும்பலைச் சேர்ந்தவர்கள், அந்தப் பெண்ணிடம் இருந்து தங்க நகைகளையும், பணத்தையும் பறித்துள்ளனர்.
பின்னர், அந்தக் கும்பலைச் சேர்ந்த இருவர், அந்தப் பெண்ணுக்கு பாலியல் துன்புறுத்தல் அளித்ததாகத் தெரிகிறது. இதனைத் தொடர்ந்து, அந்தப் பெண்ணும், ஆணும் அழுதுகொண்டே மலையில் இருந்து இறங்கி வந்து, மலையடிவாரத்தில் இருந்த சிலரிடம் தங்களுக்கு நேர்ந்த கொடுமையை சொல்லிவிட்டு, காவல் துறையில் புகார் அளிக்கமல் சென்றுவிட்டனர். இதனிடையே, இந்தச் சம்பவம் குறித்து தகவலறிந்த கிருஷ்ணகிரி எஸ்.பி. தங்கதுரை, தனிப்படை அமைத்து முழுமையான விசாரணைக்கு உத்தரவிட்டார்.
தொடர்ந்து, கிருஷ்ணகிரி டவுன் மற்றும் தனிப்படை போலீஸார் நடத்திய விசாரணையில், பெண்ணை மிரட்டி பணம், நகை வழிப்பறி செய்தது கிருஷ்ணகிரி பழையபேட்டை பகுதியை சேர்ந்த கலையரசன் (21), அபிஷேக் (20) என்பதும், பெண்ணுக்கு பாலியல் துன்புறுத்தல் அளித்தது கிருஷ்ணகிரியை சேர்ந்த சுரேஷ் (22), நாராயணன் (21) ஆகியோர் என்பம் தெரியவந்தது.
இதையடுத்து கலையரசன், அபிஷேக் ஆகியோர் வியாழக்கிழமை இரவு கைது செய்யப்பட்டனர். தலைமறைவாக இருந்த சுரேஷ், நாராயணன் ஆகியோரை போலீஸார் தேடி வந்த நிலையில், தாலுகா காவல் நிலைய எல்லைக்கு உட்பட்ட பொன்மலைகுட்டை பெருமாள் கோயில் பின்புறம் பதுக்கியிருப்பதாக போலீஸாருக்கு இன்று (பிப்.21) தகவல் கிடைத்தது.
துப்பாக்கி சூடு: இதனைத் தொடர்ந்து டவுன் இன்ஸ்பெக்டர் வெங்கடேஷ்பிரபு, எஸ்ஐ பிரபாகர் மற்றும் காவலர்கள் குமார், விஜயகுமார் ஆகியோர் சம்பவ இடத்துக்கு சென்றனர். போலீஸாரை கண்டதும் சுரேஷ், நாராயணன் ஆகியோர் தாங்கள் வைத்திருந்த கத்தியால் போலீஸாரை தாக்கிவிட்டு தப்பியோட முயன்றபோது, அவர்களில் ஒருவரை போலீஸார் துப்பாக்கியால் சுட்டுப் பிடித்தனர். மற்றொருவருக்கு காலில் எலும்பு முறிந்தது.
எஸ்.பி. விசாரணை: இச்சம்பவம் குறித்து தகவலறிந்து நிகழ்விடத்துக்கு வந்த எஸ்.பி .தங்கதுரை, ஏடிஎஸ்பி சங்கர், டிஎஸ்பி முரளி ஆகியோர் விசாரணை நடத்தினர். தொடர்ந்து கத்தியால் குத்தியதில் காயம் அடைந்த போலீஸார் குமார், விஜயகுமார் மற்றும் துப்பாக்கியால் சுட்டு பிடிக்கப்பட்ட சுரேஷ், கால் முறிவு ஏற்பட்ட நாராயணன் ஆகியோரையும் மீட்டு சிகிச்சைக்காக கிருஷ்ணகிரி அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் அனுப்பி வைத்தனர்.
தொடர்ந்து துப்பாக்கி சூடு நடந்த இடத்தை எஸ்.பி. பார்வையிட்டு விசாரணை நடத்தினார். தடயவியல் நிபுணர்கள் அங்கிருந்த தடயங்களை சேகரித்தனர். இதுகுறித்து கிருஷ்ணகிரி டவுன், தாலுகா போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
சுரேஷ் மீது ஏற்கெனவே 2 வழக்குகள்: சம்பவம் குறித்து எஸ்.பி. தங்கதுரை கூறும்போது, “கிருஷ்ணகிரி மலை பகுதிக்கு ஒரு ஆணும், பெண்ணும் வந்திருந்தனர். 4 பேர் அந்த பெண்ணை மிரட்டி நகை, ரொக்கம் ரூ.14 ஆயிரம் ஆகியவற்றைப் பறித்துள்ளனர். இதில் 2 பேர் அந்த பெண்ணை பாலியல் ரீதியாக துன்புறுத்தி உள்ளனர். இச்சம்பவம் தொடர்பாக 4 பேர் அடையாளம் காணப்பட்டனர்.
நேற்று 2 பேர் கைது செய்யப்பட்டனர். மேலும், பொன்மலை குட்டை பெருமாள் கோயில் பின்புறம் பதுக்கியிருந்த 2 பேரை பிடிக்க போலீஸார் இன்று சென்றபோது, அவர்கள் போலீஸாரை தாக்கினர். இதையடுத்து, போலீஸார் தற்காப்புக்காக சுரேஷ் என்பவரை சுட்டுப் பிடித்தனர். மற்றொரு நபர் நாராயணன் என்பவர் தப்ப முயன்ற போது தவறி விழுந்ததில் கால் முறிந்தது. கைதான சுரேஷ் மீது 2 அடிதடி வழக்குகள் உள்ளன. இதுகுறித்து மேலும் விசாரணை நடத்தி வருகிறோம்” என்று அவர் கூறினார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT