

காரைக்குடி: காரைக்குடி அருகே பள்ளியில் மின்சாரம் பாய்ந்து மாணவர் உயிரிழந்தார். அவரது உறவினர்கள், ஆசிரியரை தாக்கினர்.
காரைக்குடி அருகே பொய்யாவயலில் உயர்நிலைப் பள்ளி உள்ளது. இங்கு 500-க்கும் மேற்பட்ட மாணவர்கள் படித்து வருகின்றனர். கைலாசம் மகன் சக்திசோமையா (14) ஒன்பதாம் வகுப்பு படித்து வந்தார். இன்று பள்ளியில் கணினியை இயக்குவதற்காக பிளக்கை மாட்டியபோது, மின்சாரம் பாய்ந்து தூக்கி வீசப்பட்டார். அவரை ஆசிரியர்கள் காரைக்குடி அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர். ஆனால் அவர் ஏற்கெனவே உயிரிழந்துவிட்டதாக மருத்துவர்கள் தெரிவித்தனர். இதுகுறித்து சாக்கோட்டை போலீஸார் வழக்கு பதிந்து விசாரித்து வருகின்றனர்.
மேலும், மருத்துவமனையில் அவரது பெற்றோர், உறவினர்கள் குவிந்தனர். அப்போது அங்கு நின்ற ஆசிரியர் ஒருவரை தாக்கியதாக கூறப்படுகிறது. தொடர்ந்து மாணவரின் உயிரிழப்புக்கு காரணமான ஆசிரியர்களின் மீது வழக்கு பதிந்து நடவடிக்கை எடுக்க வேண்டும். அவரது குடும்பத்துக்கு உரிய இழப்பீடு வழங்க வேண்டுமென அதிகாரிகளிடம் வலியுறுத்தினர். அங்கு பதற்றம் நிலவியதால் காரைக்குடி டிஎஸ்பி பார்த்திபன் தலைமையில் போலீஸார் குவிக்கப்பட்டனர். மேலும் இதுகுறித்து வட்டாட்சியர் ராஜா விசாரணை நடத்தினார்.