போதைப் பொருள் கடத்தல் கும்பலிடமிருந்து 5 துப்பாக்கிகள், 79 தோட்டாக்கள் பறிமுதல்: சென்னை அரும்பாக்கத்தில் இருவர் கைது

போதைப் பொருள் கடத்தல் கும்பலிடமிருந்து 5 துப்பாக்கிகள், 79 தோட்டாக்கள் பறிமுதல்: சென்னை அரும்பாக்கத்தில் இருவர் கைது
Updated on
1 min read

சென்னை: அரும்பாக்கத்தில் போதைப் பொருள் கடத்தல் கும்பலிடமிருந்து 5 துப்பாக்கிகள், 79 தோட்டாக்கள் பறிமுதல் செய்யப்பட்டன. இது தொடர்பாக 2 பேரைக் கைது செய்த போலீஸார், துப்பாக்கி மற்றும் போதைப் பொருள் எங்கிருந்து கடத்தி வரப்பட்டன என்று விசாரித்து வருகின்றனர்.

சென்னையில் போதைப் பொருள் கடத்தல், பதுக்கல், விற்பனை செய்தலை முற்றிலும் தடுக்க காவல் ஆணையர் அருண் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளார். அதன் ஒரு பகுதியாக, அனைத்து காவல் நிலைய ஆய்வாளர்கள் தலைமையிலும் தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளன.

இந்நிலையில், அரும்பாக்கம் காவல் நிலைய ஆய்வாளர் தலைமையிலான தனிப்படையினர் கடந்த 31-ம் தேதி மாலை அரும்பாக்கம் ரசாக் கார்டன் சாலையில் கண்காணிப்புப் பணியில் ஈடுபட்டனர். அப்போது, சந்தேகப்படும் வகையில் நின்றிருந்த வியாசர்பாடி கணேசன் (51), திருவள்ளூர் மதன் (46), கொடுங்கையூர் ரவி (48) ஆகியோரிடம் சோதனையிட்டபோது, அவர்கள் போதைப் பொருள் வைத்திருந்தது தெரியவந்தது.

தொடர்ந்து, அவர்களிடமிருந்து 9.01 கிலோ கெட்டமைன் என்ற போதைப் பொருள், ரூ.51 லட்சம் ரொக்கம், 105 கிராம் தங்க நகைகள், 5 செல்போன்கள், 2 பாஸ்போர்ட்கள், 2 எடை மெஷின்கள் மற்றும் 3 இருசக்கர வாகனங்களை பறிமுதல் செய்தனர்.

மூவரையும் கைது செய்த போலீஸார், அவர்கள் கொடுத்த தகவலின்பேரில் தலைமறைவாக இருந்த சென்னை ராஜா(42), அவரது கூட்டாளி சத்தியசீலன் என்ற சதீஷ் (36) ஆகியோரை நேற்று முன்தினம் கைது செய்தனர். அவர்களிடமிருந்து 1.400 கிலோ மெத்தம்பெட்டமைன், 5 துப்பாக்கிகள், 79 தோட்டாக்கள், 2 எடை மெஷின்கள், 2 பேக்கிங் மெஷின்கள், 5 செல்போன்கள், சொகுசு கார் ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டன.

இந்த போதைப் பொருள் எங்கிருந்து கடத்தி வரப்பட்டது, துப்பாக்கியை யாரிடமிருந்து வாங்கியுள்ளனர், பின்னணியில் இருப்பவர்கள் யார் என்று போலீஸார் தொடர்ந்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in