ரூ.1.63 கோடி முறைகேடு வழக்கு: மதுரை மத்திய சிறையில் 10 மணி நேரம் லஞ்ச ஒழிப்புத் துறை சோதனை

ரூ.1.63 கோடி முறைகேடு வழக்கு: மதுரை மத்திய சிறையில் 10 மணி நேரம் லஞ்ச ஒழிப்புத் துறை சோதனை
Updated on
1 min read

மதுரை: ரூ.1.63 கோடி முறைகேடு வழக்கு தொடர்பாக மதுரை மத்திய மத்திய சிறையில் சுமார் 10 மணி நேரத்துக்கும் மேலாக லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரிகள் சோதனை மேற்கொண்டனர். வழக்கு தொடர்பாக சில ஆவணங்களையும் கைப்பற்றினர்.

மதுரை மத்திய சிறையிலுள்ள சிறை கைதிகள் எழுது பொருட்கள் உள்ளிட்ட பல்வேறு பொருட்களை தயாரிக்கும் பணியில் ஈடுபடுகின்றனர். கைதிகள் தயாரிக்கும் பொருட்கள் பல்வேறு அரசுத் துறை அலுவலகங்களில் விற்பனை செய்யப்படுகின்றன. இதில் கிடைக்கும் வருவாயின் ஒரு பகுதி சிறைக் கைதிகளுக்கு ஊதியமாகவும் வழங்கப்படுகிறது.

இந்நிலையில், கைதிகள் தயாரிக்கும் பொருட்களுக்கான மூலப்பொருட்கள் வெளியிலுள்ள பல்வேறு தனியார் நிறுவனங்களில் கொள்முதல் செய்யப்படுகிறது. இதில் உண்மையான சந்தை விலையை விட கூடுதல் விலைக்கு வாங்கியதாகவும், அரசுத் துறை அலுவலகங்களில் குறைவான விலைக்கு விற்ற பொருட்களை கூடுதலாக விற்றதாகவும் போலி பில்கள், ஆவணங்கள் தயாரித்து பல கோடி ஊழல் நடந்ததாக லஞ்ச ஒழிப்பு போலீஸாருக்கு பல புகார்கள் சென்றன.

இப்புகார்களின் அடிப்படையில் கடந்த 2016ம் ஆண்டு முதல் 2021-ம் ஆண்டு வரையிலும் சுமார் ரூ.1.63 கோடி வரையிலும் முறைகேடு நடந்து இருப்பதாகவும். இது தொடர்பாக மதுரை சிறைத்துறை கண்காணிப்பாளர் ஊர்மிளா (தற்போது கடலூர் சிறை எஸ்பி) , கூடுதல் எஸ்பி வசந்தகண்ணன், (தற்போது பாளையங்கோட்டை கூடுதல் எஸ்பி), நிர்வாக அதிகாரி எம்.தியாகராஜன் மற்றும் பொருட்கள் விநியோகம் செய்ததாக மதுரையைச் சேர்ந்த ஜபருல்லாகான், முகமது அன்சாரி, முகமது அலி, சென்னை சீனிவாசன், சென்னை சாந்தி,நெல்லை சங்கரசுப்பு, தனலெட்சுமி, சென்னை வெங்கடேஸ்வரி ஆகிய 11 பேர் மீது லஞ்ச ஒழிப்பு காவல் ஆய்வாளர் சூரியகலா வழக்கு பதிவு செய்தார்.

இவ்வழக்கு தொடர்பாக மதுரை மத்திய சிறையில் மதுரை லஞ்ச ஒழிப்புத் துறையினர் சோதனை நடத்த முடிவெடுத்தனர். இதன்படி, டிஎஸ்பி சத்யசீலன் தலைமையில் ஆய்வாளர்கள் குமருகுரு, சூரியகலா, ரமேஷ்பிரபு உள்ளிட்டோர் அடங்கிய குழுவினர் நேற்று காலை 7 மணிக்கு மத்திய சிறைக்குள் நுழைந்தனர். அவர்கள் சுமார் 10 மணி நேரத்துக்கு மேலாக முறைகேடு வழக்கு தொடர்பாக சிறைத் துறையிலுள்ள பல்வேறு ஆவணங்களை ஆய்வு செய்தனர். ஊழல், முறைகேடு தொடர்பாக அன்றைக்கு பணியில் இருந்த சில அலுவலர்கள், ஊழியர்களிடமும் விசாரித்தனர். வழக்கு தொடர்பாக சில ஆவணங்களை சிறையில் இருந்து கைப்பற்றியதாக லஞ்ச ஒழிப்புத்துறையினர் தெரிவித்தனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in