

மனைவி மீதான கோபத்தில் அரசு பெண் பயிற்சி மருத்துவரை தாக்கிய நோயாளி நேற்று கைது செய்யப்பட்டார்.
தஞ்சாவூர் மாவட்டம் ஒரத்தநாடு பகுதியைச் சேர்ந்தவர் கரிகாலன்(42). காய்ச்சல் காரணமாக தஞ்சாவூர் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு, சிகிச்சை பெற்று வருகிறார். இந்நிலையில், மருத்துவமனை வார்டில் நேற்று முன்தினம் கரிகாலனுக்கும், அவரது மனைவிக்கும் தகராறு ஏற்பட்டுள்ளது. இதனால், கரிகாலன் ஆத்திரத்தில் தனது கையில் மருந்து செலுத்துவதற்காக பொருத்தப்பட்டிருந்த வென்ஃப்ளானை கழற்றி வீசியுள்ளார். அப்போது, அங்கு சென்ற பெண் பயிற்சி மருத்துவர், அவருக்கு மீண்டும் வென்ஃப்ளானை பொருத்தி, ஊசி செலுத்திவிட்டுச் சென்றார்.
அதன்பிறகு, மனைவியுடன் மீண்டும் ஏற்பட்ட தகராறால், கையில் இருந்த வென்ஃப்ளானை கரிகாலன் மீண்டும் கழற்றிவிட்டார். இதைப் பார்த்த அதே பெண் பயிற்சி மருத்துவர், கரிகாலனைக் கண்டித்தார். அப்போது, மனைவி மீது இருந்த கோபத்தில், பெண் மருத்துவரை கரிகாலன் தகாத வார்த்தையில் திட்டி, அவரது கன்னத்தில் அறைந்து தாக்கியதாகக் கூறப்படுகிறது. இதுகுறித்த புகாரின்பேரில் மருத்துவக் கல்லூரி மருத்துவமனை போலீஸார் வழக்கு பதிவு செய்து, கரிகாலனை நேற்று கைது செய்தர். மருத்துவமனையிலேயே அவரிடம் போலீஸார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.