நடிகை சீதா வீட்டில் நகை திருட்டு: போலீஸார் விசாரணை

நடிகை சீதா வீட்டில் நகை திருட்டு: போலீஸார் விசாரணை
Updated on
1 min read

சென்னை: சென்னை விருகம்பாக்கத்தில் உள்ள நடிகை சீதாவின் வீட்டில் 4 1/2 பவுன் நகை திருடப்பட்டுள்ளது. இச்சம்பவம் குறித்து சீதா கொடுத்த புகாரின் போரில் போலீஸார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

தமிழ் சினிமாவில் ‘ஆண்பாவம்’ திரைப்படத்தின் மூலம் அறிமுகமாகி, விஜயகாந்த் உள்ளிட்ட பல முன்னணி நடிகர்களுக்கு ஜோடியாக நடித்து பிரபலமானவர் நடிகை சீதா. பின்னர் நடிகர் பார்த்திபனை காதலித்து திருமணம் செய்து கொண்டார். பின்னர் கருத்து வேறுபாடு காரணமாக பிரிந்தனர்.தற்போது குணச்சித்திர வேடங்களில் நடித்து வரும் சீதா, விருகம்பாக்கம் புஷ்பா காலனியில் வசித்து வருகிறார்.

இந்நிலையில் விருகம்பாக்கம் காவல் நிலையத்தில் அவர் புகார் ஒன்றை அளித்துள்ளார். கடந்த அக்.31ம் தேதி, தனது தம்பியின் மனைவி கல்பனா, விசேஷம் ஒன்றுக்கு சென்றுவிட்டு வீட்டுக்கு வந்தார். அவர், அணிந்திருந்த 4 1/2 பவுன் நகைகளை வீட்டில் கழற்றி வைத்துவிட்டு உறங்கிவிட்டார். பின்னர், எழுந்து பார்த்த போது அந்த நகைகள் மாயமாகி விட்டன. எனவே தனது வீட்டில் திருடு போன அந்த நகையை கண்டுபிடித்து தரவேண்டும் என்று அந்த புகாரில் கூறியிருந்தார்.

இந்த புகார் குறித்து வழக்குப்பதிவு செய்துள்ள போலீஸார் அந்த பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமரா பதிவுகளை ஆய்வு செய்து நகை திருடியவரை தேடி வருகின்றனர். மேலும் சீதா வீட்டில் வேலை பார்த்து வரும் பணிப்பெண்ணிடமும் போலீஸார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in