

சென்னை: சென்னையில் வசிக்கும் சர்வதேச பாட்மின்டன் வீராங்கணைக்கு செல்போனில் தொடர் தொல்லை கொடுத்ததாக பெங்களூரு இளைஞரை சைபர் க்ரைம் போலீஸார் கைது செய்துள்ளனர்.
சென்னையில் வசிக்கும் பிரபல சர்வதேச பாட்மின்டன் வீராங்கணை ஒருவர், தமிழக சைபர் க்ரைம் காவல் துறையில் கடந்த செப்.21-ம் தேதி புகார் அளித்தார். அதில், ‘‘எனது வாட்ஸ்அப்-க்கு தொடர்ச்சியாக ஒரு நபர் தகவல்களை அனுப்புகிறார். அந்த நபர், பிரபல பெண் விளையாட்டு வீராங்கணைகளின் புகைப்படங்களை ‘டிபி’யாக வைத்து இதுபோன்ற தகவல்களை அனுப்புகிறார்.
ஆனால், அந்த புகைப்படத்தில் இருக்கும் வீராங்கணைக்கும், அனுப்பும் நபருக்கும் எந்த சம்பந்தமும் இல்லை. ஆள்மாறாட்டம் மூலம் தகவல் அனுப்புகிறார். இதைத் தெரிந்து கொண்ட நான் அந்த எண்ணை பிளாக் செய்தேன். பின்னர் அந்த நபர் வேறு எண்களிலிருந்து தொடர்ந்து தொடர்பு கொள்கிறார்.
இரவு நேரங்களில் அருவருக்கத்தக்க முறையில் பேசியும் தொந்தரவு கொடுக்கிறார். எனவே, சம்பந்தப்பட்ட நபரை அடையாளம் கண்டு அவர் மீது சட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும்’’ என புகாரில் தெரிவித்து இருந்தார்.
இதுகுறித்து உரிய நடவடிக்கை எடுக்க சைபர் க்ரைம் பிரிவு கூடுதல் டிஜிபி சந்தீப் மித்தல் உத்தரவிட்டார். அதன்படி, அப்பிரிவு போலீஸார் வழக்குப் பதிந்து விசாரித்தனர்.
இதில், பாட்மின்டன் வீராங்கணைக்கு ஆள்மாறாட்டம் மூலம் தொடர்ந்து தொல்லை கொடுத்தது பெங்களூருவில் வசிக்கும் சாலிசி சிவா தேஜா(30) என்பது தெரியவந்தது.
இதையடுத்து தனிப்படை போலீஸார் பெங்களூரு விரைந்து அவரை கைது செய்தனர். பின்னர், அவரை சென்னை அழைத்து வந்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையிலடைத்தனர். தொடர்ந்து விசாரணை நடைபெறுகிறது.