

ஓசூர்: பாகலூர் அருகே எலுவப்பள்ளியில் அரசு உதவிபெறும் பள்ளி மாணவியை தாக்கிய உடற்கல்வி ஆசிரியரை போலீஸார் கைது செய்தனர்.
கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் அடுத்த பாகலூர் அருகே எலுவப்பள்ளியில் உள்ள தனியார் பள்ளியில் கடந்த 23-ம் தேதி அரசு மற்றும் தனியார் பள்ளி மாணவ,மாணவிகளுக்கிடையே மாவட்ட அளவில் கைப்பந்து விளையாட்டு போட்டி நடந்தது. இந்த விளையாட்டு போட்டியில் கலந்துகொள்ள ஓசூரில் உள்ள அரசு உதவிப்பெறும் தனியார் பள்ளியை சேர்ந்த பள்ளி மாணவிகளும் கலந்துகொண்டனர். போட்டி நடந்த பள்ளியின் ஆசிரியை ஒருவர் தனது கைக்கடிகாரத்தை ஓசூர் பள்ளி மாணவி எடுத்துள்ளதாக உடற்கல்வி ஆசிரியர் தியாகராஜனிடம் கூறி உள்ளார்.
மாணவி கைக்கடிகாரம் கீழே இருந்ததாக ஆசிரியையிடம் திருப்பி ஒப்படைத்துள்ளார். இதனால் ஆத்திரமடைந்த உடற்கல்விஆசிரியர் தியாகராஜன் பள்ளியின் வெளியே சக மாணவிகள் முன்னிலையில் கைக்கடிகாரம் எடுத்த மாணவியை கடுமையாக தாக்கி கீழே தள்ளிஉள்ளார். இந்த சம்பவம் அப்பகுதியில் இருந்த கண்காணிப்பு கேமராவில் பதிவாகி உள்ளது. இந்த வீடியோ தற்போது சமூக வலையதளங்களில் வேகமாக பரவியதால், இது குறித்து பாகலூர் போலீஸார் தனியார் பள்ளிக்கு சென்று தாக்கப்பட்ட மாணவி மற்றும் உடற்கல்வி ஆசிரியரிடம் விசாரணை செய்தனர். பின்னர் மாணவியை தாக்கிய உடற்கல்வி ஆசிரியரை போலீஸார் கைது செய்தனர்.