

சென்னை: சென்னையில் தாறுமாறாக ஓடிய கார் அடுத்தடுத்து வாகனங்கள் மீது மோதி விபத்துக்குள்ளானது. இதில் 2 குழந்தைகள் உள்பட 7 பேர் காயடைந்து மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
சென்னை பூந்தமல்லி நெடுஞ்சாலையில் கீழ்ப்பாக்கத்தில் இருந்து சென்ட்ரல் நோக்கி செல்லும் வழியில் நேற்று மாலை வாகனங்கள் சென்று கொண்டிருந்தன. அப்போது, இன்னோவா கார் ஒன்று தாறுமாறாக பூந்தமல்லி நெடுஞ்சாலையில் சென்ட்ரல் நோக்கி சாலையில் சென்று கொண்டிருந்தது. அந்த கார், சாலையில் சென்றுகொண்டிருந்த இருசக்கர வாகனங்கள், ஆட்டோ மற்றும் கார் மீது பயங்கரமாக மோதிவிட்டு நிற்காமல் தொடர்ந்து சென்றது. இதில் ஆட்டோ, இருசக்கர வாகனங்கள் பலத்த சேதம் அடைந்து வாகன ஓட்டிகளுக்கும் காயம் ஏற்பட்டது.
2 பேருக்கும் தர்மஅடி: இதைக் கண்டு அதிர்ச்சி அடைந்த மற்ற வாகன ஓட்டிகள் அந்த காரை தங்களது வாகனங் களில் துரத்தி சென்றனர். வழியில் மீண்டும் அந்த கார், சாலையில் சென்ற மற்ற வாகனங்கள் மீது மோதிவிட்டு, கடைசியாக, வேப்பேரி காவல் ஆணையர் அலுவலகம் அருகில் ஒரு காரை இடித்துவிட்டு நின்றது. பின்னர், விபத்து ஏற்படுத்திய காரில் இருந்து இறங்கிய 2 பேர்அங்கிருந்து தப்பித்து ஓட முயன்றனர். ஆனால், பொதுமக்கள் அவர்கள் இருவரையும் மடக்கி பிடித்து, தர்ம அடி கொடுத்தனர். இதில், அவர்கள் இருவருக்கும் பலத்த காயம் ஏற்பட்டது.
ஒருவர் கைது: விரைந்து வந்த வேப்பேரி போக்குவரத்து போலீஸார், பொதுமக்களிடம் இருந்து அவர்கள் இருவரையும் மீட்டு, விசாரணை நடத்தினர். மேலும், காரை சோதனை செய்தபோது, அதில் உகாண்டா நாட்டு தூதரக ஆவணங்கள் இருந்ததைக் கண்டனர். அந்த ஆவணங்களை பறிமுதல் செய்தனர். இந்த விபத்தில் 2 குழந்தைகள் உள்பட 7 பேர் படுகாயம் அடைந்தனர்.
அவர்கள் அனைவரும் அருகில் இருந்த மருத்துவமனைகளுக்கு சிகிச்சைக்காக அனுப்பிவைக்கப்பட்டனர். இந்த சம்பவம் குறித்து அண்ணா சதுக்கம் போக்குவரத்து புலனாய்வு பிரிவு போலீஸார் வழக்குப் பதிவு செய்து, காரை வேகமாக ஓட்டி வந்த அரும்பாக்கம் என்எஸ்கே நகரைச் சேர்ந்த ரமணி (60) என்ப வரைக் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.