ஆயிரம் விளக்கு மசூதிக்கு 3 நாளாக வெடிகுண்டு மிரட்டல்: போலீஸ் விசாரணை

ஆயிரம் விளக்கு மசூதிக்கு 3 நாளாக வெடிகுண்டு மிரட்டல்: போலீஸ் விசாரணை
Updated on
1 min read

சென்னை: சென்னையில் உள்ள ஆயிரம் விளக்கு மசூதிக்கு தொடர்ந்து 3-வது நாளாக இன்றும் வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டது. இது தொடர்பாக போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

சென்னை ஆயிரம் விளக்கு பீட்டர்ஸ் சாலையில் பழமையான மசூதி உள்ளது. பல மாடங்களைக் கொண்ட நாட்டில் உள்ள மிகப்பெரிய மசூதிகளில் இதுவும் ஒன்றாகும். இந்நிலையில், ஆயிரம் விளக்கு மசூதியில் வெடி குண்டு வைத்திருப்பதாகவும், சிறிது நேரத்தில் வெடிக்க இருப்பதாகவும் சென்னை விமான நிலைய நிர்வாக அலுவலகத்துக்கு இன்று (அக்.19) காலை மின்னஞ்சல் ஒன்று வந்தது. இதைக் கண்ட விமான நிலைய அதிகாரிகள் இது குறித்து, அண்ணாசாலை காவல் நிலையத்துக்கு தகவல் தெரிவித்தனர்.

தகவலின் பேரில் அண்ணா சாலை காவல் ஆய்வாளர் மோகன் தாஸ் தலைமையிலான போலீஸார், வெடிகுண்டு நிபுணர்கள் மற்றும் மோப்ப நாய்களுடன் ஆயிரம் விளக்கு மசூதிக்கு விரைந்தனர். அங்கு, மசூதி முழுவதும் அனைத்து இடங்களிலும் வெடிகுண்டு நிபுணர்களுடன் போலீஸார் தீவிர சோதனை நடத்தினர். சோதனையின் முடிவில், சந்தேகத்துக்கு இடமாக எந்தவித பொருட்களும் மசூதியில் இல்லை எனத் தெரியவந்தது. மேலும், இது வெறும் புரளி என்றும் போலீஸாருக்கு தெரிய வந்தது. இதுதொடர்பாக போலீஸார் வழக்குப்பதிவு செய்து, வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்ட மின்னஞ்சல் முகவரியை ஆய்வு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

ஏற்கெனவே, இந்த மசூதிக்கு கடந்த 16 மற்றும் 18-ம் தேதிகளில் 2 முறை தொடர்ந்து வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டது. இதையடுத்து போலீஸார் 2 முறையும், மோப்ப நாய் உதவியுடன் மசூதியில் சோதனை செய்து வெடிகுண்டு ஏதும் கிடைக்காததால், அது புரளி என்பதை கண்டறிந்தனர். இந்நிலையில், இன்று 3 நாளாக அதே மசூதிக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டு மின்னஞ்சல் அனுப்பியிருக்கும் சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in